சினிமாத்துறையினர் நடத்திய போராட்டத்தில் கலந்து கொள்ளாதது ஏன்? உதயநிதி விளக்கம்
காவிரி மேலாண்மை வாரியத்துக்காக சினிமாத்துறையினர் நடத்திய போராட்டத்தில் கலந்து கொள்ளாதது ஏன்? என உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் சினிமாத்துறையினர் மவுனப் போராட்டம் நடத்தினர். கடந்த 8ஆம் தேதி சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்தப் போராட்டம் நடைபெற்றது.
ரஜினி, கமல், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, விஷால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்தப் போராட்டத்தில், அஜித், உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, ஜீவா, விஷ்ணு விஷால் போன்றோர் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில், அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளாதது ஏன்? என விளக்கம் அளித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். “அன்றைய தினம் கிருஷ்ணகிரியில் திமுக நிர்வாகி ஒருவரின் வீட்டுத் திருமணம். அதில் கலந்து கொள்வதாக அப்பா வாக்கு கொடுத்திருந்தார். ஆனால், காவிரி மீட்புப் பயணத்திற்காக அவர் சென்றுவிட்டதால், அவருக்குப் பதிலாக நான் திருமணத்தில் கலந்து கொண்டேன்.
அங்கிருந்து அப்படியே அப்பாவுடன் காவிரி மீட்புப் பயணத்தில் கலந்து கொண்டேன். எப்படி இருந்தாலும், அன்று நான் காவிரி மேலாண்மை வாரியத்துக்கான போராட்டத்தில் தானே கலந்து கொண்டேன்” எனத் தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.