1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 3 ஜனவரி 2025 (07:33 IST)

ஏன் வணங்கான் படத்துக்கு ஜிவி பிரகாஷ் பின்னணி இசை அமைக்கவில்லை?.. தயாரிப்பாளர் பதில்!

கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் பாலாவுக்கு அவரது திரையுலக வாழ்க்கை சிறப்பாக அமையவில்லை. அவர் இயக்கிய வர்மா திரைப்படம் திருப்திகரமாக இல்லை எனக் கூறப்பட்டு வேறொரு இயக்குனரை வைத்து மீண்டும் இயக்கி வெளியிட்டார்கள். அதன் பின்னர் பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் திரைப்படத்தில் இருந்து சூர்யா விலகிக் கொள்ள அதுவும் அடுத்த அடியாக அமைந்தது.

அதன்  பின்னர் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில், ரோஷினி ஹரிப்ரியன், சமுத்திரக்கனி மற்றும் மிஷ்கின் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த  படத்தை இயக்குனர் பாலா மற்றும் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் இணைந்து தயாரிக்க படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தின் மேல் நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் பாடல்களுக்கு ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில் பின்னணி இசையை சாம் சி எஸ் அமைத்துள்ளார். அது பற்றி பேசியுள்ள தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி “பின்னணி இசைப் பணிகளுக்காக ஜி வி பிரகாஷ் இரண்டு மாதங்கள் நேரம் கேட்டார். ஆனால் எங்களுக்கு அவ்வளவு கால அவகாசம் இல்லாததால் சாம் சி எஸ் பின்னணி இசை அமைத்துள்ளார். அவர் மிகச்சிறப்பான இசையைக் கொடுத்துள்ளார்” எனக் கூறியுள்ளார்.