டெல்லி காற்று மாசு – விஜய் படத்தின் படப்பிடிப்பு பாதிப்பா ?
டெல்லியில் நடைபெற்று வரும் விஜய் 64 படத்தின் படப்பிடிப்பு காற்று மாசுப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
பிகில் படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கும் வேளையில் விஜய் தனது அடுத்த படத்தின் வேலைகளில் மும்முரமாக உள்ளார். விஜய் 64 எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தை மாநகரம், கைதி படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்தப்படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்தப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக டெல்லியில் காற்று மாசு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் விஜய் 64 படத்த்தின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
ஆனால் இந்த செய்தியைப் படக்குழு மறுத்துள்ளது. தினசரி படப்பிடிப்பு நடைபெறுவதாகவும் அதில் விஜய் மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் பங்குபெறும் காட்சிகள் படம்பிடிக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிய இருப்பதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும் அறிவித்துள்ளது.