இந்தியன் 2: முதல்முறையாக கமல்ஹாசனுடன் இணையும் பிரபல காமெடி நடிகர்!
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் 'இந்தியன் 2' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் தற்போது ரகுல் ப்ரீத்திசிங், ப்ரியா பவானிசங்கர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இம்மாத இறுதியில் கமல்ஹாசன் இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைவார் என்றும், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் கமல்ஹாசன் முழு அளவில் இந்த படத்தில் நடிப்பார் என்றும் கருதப்படுகிறது
இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் சமுத்திரக்கனி இணைந்த நிலையில் தற்போது நடிகர் விவேக் இந்த படத்தில் இணைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது. இந்த தகவல் உண்மையெனில் கமல்ஹாசனுடன் விவேக் முதல்முறையாக இணைந்து நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கே.பாலசந்தர் இயக்கிய 'பார்த்தாலே பரவசம்' படத்தில் விவேக் ஒரு முக்கிய கேரக்டரிலும் கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்திலும் நடித்திருந்தபோதிலும் இருவரும் இணைந்த காட்சிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
ஆனால் அதே நேரத்தில் ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்', 'அந்நியன்' மற்றும் 'சிவாஜி' ஆகிய படங்களில் விவேக் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 'இந்தியன் 2' படத்தில் ஒவ்வொரு பிரபலங்களாக இணைந்து வருவது அந்த படத்தின் எதிர்பார்ப்பு உச்சத்திற்கு சென்றுள்ளது