வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 31 டிசம்பர் 2018 (08:22 IST)

விஸ்வாசம் டிரைலர் – ’பேட்ட’க்குப் பதில் சொன்னதா ?

பேட்ட படத்தின் டிரைலர் இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியான நிலையில் நேற்று விஸ்வாசம் படத்தின் டிரைலரும் வெளியாகி ரசிகர்களிடையே மோதல் போக்கை உருவாக்கியுள்ளது.

பேட்ட படமும் விஸ்வாசம் படமும் பொங்கலை முன்னிட்டு ஒரே நாளில் ரிலிசாக இருப்பதால் இரு நடிகர்களின் ரசிகர்களும் ஆன்லைன் உலகில் மோத ஆரம்பித்திருக்கின்றனர். பேட்ட படத்த்தின் டிரைலர் கடந்த 28 ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்ற அந்த டிரைலர் அஜித் ரசிகர்களுக்கு உவப்பானதாக இல்லை.

டிரைலரில் ரஜினி பேசும் வசனங்களான ‘அடிச்சு அண்டர்வேரோட ஓட விட்ருவேன்.. மானம் போச்சுன்னா… திரும்ப வராது.. பாத்துக்கோ’ மற்றும் ‘ எவனுக்காவது பொண்டாட்டி புள்ள செண்ட்டிமெண்ட் இருந்தா… ஓடிப்போயிடு.. கொல காண்டுல இருக்கேன்… கொல்லாம விடமாட்டேன்’ எனும் வசனங்கள் விஸ்வாசம் படத்தையும் அஜித்தையும் தாக்குவதாக அவர்கள் மத்தியில் ஒரு எண்ணம் எழுந்தது. அதற்கேற்றாற்போல ரஜினி ரசிகர்களும் நெட்டிசன்களும் இந்த வசனங்களை டிரண்ட் ஆக்கினர்.

அதனால் 2 நாட்களாக ஆவேசமாக இருந்த அஜித் ரசிகர்கள் நேற்று முதல் உற்சாகமாகியுள்ளனர். அதற்குக் காரணம் நேற்று வெளியான விஸ்வாசம் டிரைலர்தான். அதில் அஜித் பேசியுள்ள சில வசனங்கள் ரஜினிக்குப் பதில் சொல்வது போலவும் கேலி செய்வது போலவும் அமைந்துள்ளன. அஜித்  பேசும் ‘ உங்க மேல கொல கோவம் வரணும்… ஆனா உங்கள எனக்குப் புடிச்சுருக்கு… ஊரு தேனி மாவட்டம்… பொண்டாட்டி பேரு நிர்ஞ்சனா… பொன்னு பேரு ஸ்வேதா…முடிஞ்சா ஒத்தைக்கு ஒத்த வாடா’ ஆகிய வசனங்கள் பேட்ட டிரைலரில் ரஜினி பேசிய வசனங்களுக்குக் கவுண்ட்டர் கொடுப்பது போல அமைந்துள்ளதால் அஜித் ரசிகர்கள் அதைப் பரப்பி வைரல் ஆக்கியுள்ளனர்.

கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் டிவிட்டர் இரண்டும் அஜித், ரஜினி ரசிகர்களால் போர்க்களமாக மாறியுள்ளது. இன்னும் 10 நாட்களில் இரண்டுப் படங்களும் ரிலிசாக உள்ள நிலையில் இந்த மோதல் போக்கு எங்கே போய் முடியுமெனத் தெரியவில்லை.