திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : வியாழன், 28 டிசம்பர் 2023 (10:28 IST)

தமிழ் சினிமாவில் முதன் முதலில் சமபந்தி போஜனம் நடத்திய கேப்டன் விஜயகாந்த்!

தமிழ் திரையுலகில் வில்லனாக தனது கேரியரைத் துவங்கிய விஜயகாந்த், அதன் பின்னர் ஹீரோவானார். 1979 ஆம் ஆண்டு அவர் இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமாகி படிப்படியாக உயர்ந்து கதாநாயகனார். அவருடைய வளர்ச்சிக்கு அவரின் நெருங்கிய நண்பராக இருந்த இப்ராஹிம் ராவுத்தரும் ஒரு முக்கியக் காரணமாக இருந்தார்.

இருவரும் இணைந்து ஐ வி புரொடக்‌ஷன்ஸ் என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி அதன் மூலம் பல வெற்றிப் படங்களை தயாரித்தனர். அந்த நிறுவனத்தின் மற்றொரு இமாலய சாதனை என்றால் அது தமிழ் சினிமாவில் அனைவருக்கும் ஒரே விதமான உணவு வழங்கியதுதான். அதற்கு முன்னர் வரை முக்கிய நடிகர் நடிகைகள் அனைவருக்கும் அவர்கள் விரும்பிய அசைவ உணவுகளும், மற்ற துணை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு சாதாரண அசைவ உணவும்தான் வழங்கப்படும்.

ஆனால் விஜயகாந்த் தன்னுடைய நிறுவனத்தில் நடிகர்கள் முதல் லைட்பாய் வரை அனைவருக்கும் ஒரே மாதிரியான அசைவ உணவுதான் வழங்கவேண்டும் எனக் கூறி அதை தொடர்ந்து நடைமுறையும் படுத்தியவர். அதன் பிறகுதான் தமிழ் சினிமாவில் அனைவருக்கும் அசைவ உணவு வழங்கும் பழக்கத்தை அனைத்துத் தயாரிப்பு நிறுவனங்களும் அமல்படுத்தின. இதன் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முதலாக சமபந்தி போஜனத்தை அமல்படுத்திய பெருமைக்குரியவர் ஆனார் கேப்டன் விஜயகாந்த். அதனால்தான் இன்றுவரை சினிமா தொழிலாளர்கள் விஜயகாந்த் மீது அளவற்ற பாசம் கொண்டு அவரின் மரணத்துக்கு கண்ணீர் வடிக்கின்றனர் என்றால் அது மிகையாகாது.