திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (18:58 IST)

மீண்டும் தள்ளிவைக்கப்பட்ட மாமனிதன் ரிலீஸ்… ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் திரைப்படத்தின் ரிலீஸ் மே 20 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

சீனுராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணியில் தென் மேற்குப்பருவக்காற்று, இடம் பொருள் ஏவல் மற்றும் தர்மதுரை ஆகியப் படங்களுக்கு அடுத்து மாமனிதன் படம் உருவாகியுள்ளது. 2018 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டே முடிந்தது. ஆனால் இன்னமும் ரிலிஸ் ஆகாமல் உள்ளது. இந்த படத்தைத் தயாரித்துள்ள யுவன் ஷங்கர் ராஜா இப்போது ரிலிஸுக்கான வேலைகளில் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்காக இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவரும் சேர்ந்து இசையமைத்துள்ளனர்.

படம் முடிந்து ஒரு வருடத்துக்கு மேலாகியும் இன்னும் ரிலிஸாகவில்லை. இது சம்மந்தமாக யுவனுக்கும் சீனு ராமசாமிக்கும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகவும் அதனால் சீனு ராமசாமிக்கு சம்பள பாக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது இரு தரப்புக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள் முடிந்து படத்தின் படத்தொகுப்பு பணிகள் நிறைவடைந்து சென்சார் சான்றிதழும் பெற்றுள்ளது.

இந்த படத்தின் தமிழக மற்றும் கேரள திரையரங்க விநியோக உரிமையை முன்னணி தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேஷ் வாங்கியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர் படம் மே 6 ஆம் தேதி வெளியாகும் என நேற்று அவர் அறிவித்திருந்தார். ஆனால் இப்போது மாமனிதன் மே 20 ஆம் தேதி தள்ளிவைக்கப்படுவதாகவும், மே 6 ஆம் தேதி அவர் நடிப்பில் உருவாகியுள்ள விசித்திரன் திரைப்படம் வெளியாகும் என்றும் அறிவித்திருந்தார்.

ஆனால் இப்போது மீண்டும் மாமனிதன் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாம். கிட்டத்தட்ட ஒரு மாதம் தள்ளி ஜுன் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. ஏப்ரல் 28 மற்றும் ஜூன் 3 ஆகிய தேதிகளில் விஜய் சேதுபதி நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் விக்ரம் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன.