திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (10:07 IST)

விஜய் ஆண்டனியின் ஹிட்லர் படத்துக்கு விநியோகஸ்தர்கள் ரெட் கார்டா?

இசையமைப்பாளராக வலம் வந்த விஜய் ஆண்டனி நான் படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். இந்த படம் வெற்றிப் பெற்றதை அடுத்து தொடர்ந்து நடிப்பிலும் இசையிலும் கவனம் செலுத்தி வந்தார். கடந்த வாரம் அவர் நடிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்போது விஜய் ஆண்டனி ஹிட்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை படைவீரன் படத்தின் இயக்குனர் தனா இயக்கி வருகிறார்.ரியா சுமன் மற்றும் கௌதம் மேனன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க, விவேக் மெர்வின் இசையமைக்கின்றனர். இந்த படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. அரசியல் பின்னணியில் உருவாகும் ஆக்‌ஷன் கதைக்களம் என்பது டீசரைப் பார்க்கையில் தெரிகிறது.

இந்த படத்தின் ரிலீஸ் வேலைகள் நடந்து வரும் நிலையில் இப்போது இந்த படத்துக்கு விநியோகஸ்தர்கள் ரெட் கார்ட் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை தயாரித்துள்ள செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் ஏற்கனவே தயாரித்து வெளியிட்ட சில படங்களால் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரிகட்டாமல் இந்த படத்தை வெளியிடக் கூடாது என விநியோகஸ்தர்கள் இந்த படத்துக்கு ரெட் கார்ட் போட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.