திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 15 செப்டம்பர் 2022 (13:13 IST)

துப்பாக்கி ஒரு பேய்.. எடுத்தா விடாது..! – வெந்து தணிந்தது காடு விமர்சனம்!

VTK
சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய வெந்து தணிந்தது காடு திரைப்பரம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக சரியாக படம் அமையாத சிம்புவுக்கு மாநாடு படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதை தொடர்ந்து வித்தியாசமான கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து சிம்பு நடித்து வருகிறார். அப்படியாக சிம்பு – கௌதம் மேனன் கூட்டணியில் மூன்றாவதாக வெளியாகியுள்ள படம்தான் இந்த வெந்து தணிந்தது காடு.

தென் தமிழகத்தின் வளமை அறியாத வறண்ட கிராமம் ஒன்றை சேர்ந்தவர் முத்துவீரன் (சிலம்பரசன்). அங்குள்ள கருவைக்காட்டில் மரவிறகு வெட்டியாக இருந்து வரும் முத்துவீரன் அந்த காடு பற்றி எரிந்ததால் காட்டின் குத்தகையாளரோடு மோதலில் ஈடுபடுகிறான். முத்துவீரன் கொலை செய்வான் என அவனது ஜாதகத்தில் உள்ளதால், அதை நினைத்து பயப்படும் அவனது அம்மா, அவனை தனது உறவினரான (பவா செல்லதுரை) மூலமாக மும்பையில் உள்ள அவரது பரோட்டா கடையிலேயே வேலைக்கு சேர்த்துக் கொள்ளும்படி கேட்கிறார்.
VTK


அவரும் ஒத்துக்கொள்ள அன்று ஒரு கடிதத்தை மும்பை அட்ரஸுக்கு அனுப்பிவிடுமாறு முத்துவீரனிடம் கொடுத்துவிட்டு தற்கொலை செய்து கொள்கிறார் பவா. இதனால் தன்னந்தனியாளாக மும்பை செல்லும் முத்துவீரன் பரோட்டா கடையில் வேலைக்கு சேர்கிறார். பின்னர்தான் அங்கு பகலில் பரோட்டா கடையும் இரவில் கூலிப்படை சம்பவங்களும் நடைபெறுவதை முத்துவீரன் அறிகிறான்.

அங்கிருந்து தப்பி சென்று விடலாம் என நினைக்கும் முத்துவீரனை அந்த வன்முறை தனக்குள் இழுத்துக் கொள்கிறது. இதற்கிடையே பாவையை கண்டு அவள் மேல் காதல் கொள்கிறான் முத்து. படத்தின் முதல் பாகம் கிராமத்திலிருந்து புறப்பட்டு வன்முறை தவிர்த்து வாழ முயலும் முத்துவின் கதையும், இடைவேளைக்கு பிறகு வன்முறையெ வாழ்க்கையான முத்துவீரனின் கதையும் நம்மை அழைத்து செல்கிறது.

படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் சிம்புவின் நடிப்பு. அம்மாஞ்சி கிராமத்து இளைஞனாக தனது உடல் மொழியால் பார்க்கும் எல்லாரையும் “நம்ம சிம்புவா இது?” என்று வியக்கும் வண்ணம் செய்துள்ளார். முதல் பாதி வரை இருந்த அந்த உடல் மொழி, தென் தமிழ் ஸ்லாங் இரண்டாம் பாதியில் இல்லாமல் போவது இருவேறு சிம்புவை பார்ப்பது போன்ற தோற்றத்தை தருகிறது.
VTK


படத்தில் பாவையாக நடித்திருந்த சிதி இட்னானி ரசிகர்களை கவர்கிறார். ஆனால் வசனம் உச்சரிக்கும்போதும், பாடலின் போது ஏன் படம் முழுவதிலுமே வாயை திறக்காமல் முனுமுனுக்கும் விதமாக பேசுவது சின்க் ஆகாத உணர்வை தருகிறது. சிம்புவின் சக மலையாளி நண்பனாக வரும் நீரஜ் மாதவ் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். விக்ரம் பட புகழ் ஜாஃபர் சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் தனக்கு கொடுக்கப்பட்ட மாஸ் ரோலை அசகாயமாக செய்துள்ளார்.

படத்தில் இவ்வளவு ப்ளஸ்கள் இருந்தாலுமே படத்தின் அதிகமான நீளம் மற்றும் முதல் பாகத்தோடு ஒன்றாமல் பயணிக்கும் இரண்டாம் பாதி ஆகியவை பார்வையாளர்களுக்கு சிறிது சலிப்பையும் ஏற்படுத்துகின்றன. ஆங்காங்கே ஏ.ஆர்,ரகுமானின் இசை மற்றும் பாடல்கள் பூஸ்ட் ஏற்றுவதாய் உள்ளன. படம் எப்போது முடியும் என ரசிகர்களே எதிர்பார்க்க தொடங்கும் நேரம் க்ளைமேக்ஸ் வந்தாலும், அதில் திடீரென ஒரு லீட் எடுத்து அடுத்த படத்திற்கான காட்சிகளை அமைத்துள்ளது படம் முழுவதுமாக முடிந்த திருப்தியை அளிக்க தவறுகிறது. முந்தைய கௌதம் மேனன் – சிம்பு கூட்டணியில் உருவான அச்சம் என்பது மடமையடா படத்தை விட சிறப்பானதாக இருந்தாலும், சிலே க்ளிஷேக்களை தவிர்த்திருக்கலாம். ஜெயமோகனின் வசனம் படத்திற்கு பெரும் பலம்.