சக்கர பொங்கலுக்கு வடகறியா?... ஷங்கர் இயக்க உள்ள வேள்பாரி படத்தில் பாலிவுட் ஹீரோ?
இயக்குனர் ஷங்கர் எழுத்தாளரும், மக்களவை உறுப்பினருமான சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலைப் படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. பாகுபலி மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று படங்களின் வெற்றியை அடுத்து மறுபடியும் ஒரு வரலாற்று புனைவு திரைப்படம் உருவாக உள்ளது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.
முதலில் இரண்டு பாகங்களாக உருவாக இருந்த இந்த மெஹா பட்ஜெட் திரைப்படம் இப்போது 3 பாகங்களாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் முதலில் 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் என சொல்லப்பட்ட இந்த படம் இப்போது ஒவ்வொரு பாகமும் சுமார் 700 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் படத்தில் ரண்வீர் சிங் கதாநாயகனாக நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் பரவி, இப்போது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வேள்பாரி என்ற தமிழ் மன்னனாக ஒரு வடநாட்டு நடிகர் நடித்தால் எப்படி இருக்கும் என்பதே அவர்களின் அதிருப்திக்குக் காரணம்.