வான்வழி வந்தோர் மட்டும் தான் மேன்மக்களா? கேரள அரசுக்கு வைரமுத்து கண்டனம்
கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான தமிழர்கள் உயிரோடு புதைந்தனர் என்பது சோகமான சம்பவமாக இருந்தது. இந்த இயற்கை பேரிடரை அடுத்து கேரளா மீட்புப் படையினர் உடனடியாக களத்தில் இறங்கி மீட்பு பணிகளை செய்து வருகின்றனர். மத்திய அரசின் மீட்புப்படை வீரர்களும் உதவி செய்து வருகின்றனர்.
இருப்பினும் இடைவிடாத மழை மற்றும் மேலும் நிலச்சரிவு ஏற்படுமோ என்ற அச்சம் காரணமாக மீட்புப் பணிகள் தாமதமாக நடந்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் கோழிக்கோடு விமான விபத்து ஏற்பட்டதும் அதிரடியாக மீட்பு படைகள் களமிறங்கி காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த இரண்டு இயற்கை பேரிடர்களை சீமான் உள்பட தமிழக அரசியல்வாதிகள் சிலர் ஒப்பீட்டு தமிழர்கள் என்பதால் நிலச்சரிவு மீட்புப் பணியில் தாமதம் காட்டுவதாக குற்றம் சாட்டினார்கள் இந்த நிலையில் கவியரசு வைரமுத்து இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
விமான விபத்து மீட்சியைத்
திறம்பட நிகழ்த்திய கேரள
ஆட்சியைப் பாராட்டுகிறோம்.
அதேபோல் மண்ணில் புதைந்த
மக்களுக்கும் விரைந்த மீட்பும்
தகுந்த காப்பும் வழங்க வேண்டுகிறோம்.
வான்வழி வந்தோர் மேன்மக்களல்லர்;
மண்வழி சென்றோர் கீழ்மக்களல்லர் என்பது பொதுவுடைமை பூமிக்குப்
புரியாதா என்ன?