செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 17 நவம்பர் 2021 (11:18 IST)

சூர்யா செல்லுமிடமெல்லாம் துப்பாக்கி ஏந்திய போலிஸ் பாதுகாப்பு!

நடிகர் சூர்யா வீட்டுக்கு ஏற்கனவே 5 போலிஸார் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட நிலையில் இப்போது சூர்யாவுக்கு தனியாக 2 ஆயுதம் ஏந்திய போலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் தா.செ.ஞானசேகர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜெய்பீம். பழங்குடி மக்களுக்கு எதிராக நடக்கும் காவல்துறை அடக்குமுறைகளை எடுத்துக்காட்டும் விதமாக உருவான இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரித்து அமேசான் ஓடிடி தளத்தில் வெளியிட்டது.

25 ஆண்டுகளுக்கு முன்னர் கடலூர் மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் அனைத்துத் தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இந்த படம் அமேசான் ஓடிடியில் தற்போது வெளியாகி மிகப்பெரிய பாராட்டுகளையும் வரவேற்புகளையும் குவித்தது.

இந்நிலையில் ஒரு காட்சியில் காட்டப்பட்ட காலண்டர் ஒன்று குறிப்பிட்ட சமூக மக்களை இழிவுப் படுத்தும் விதமாக உள்ளதாக பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். உடனடியாக அந்த காலண்டர் சம்மந்தப்பட்ட காட்சிகள் மாற்றப்பட்டன. ஆனால் சூர்யா மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் இல்லை என்றால் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்குத் தொடுக்கப்படும் எனவும் பாமக வழக்கறிஞர் பாலு கூறிவந்தார். இது சம்மந்தமாக சூர்யாவை இழிவாக சமூகவலைதளங்களில் விமர்சித்து பதிவுகள் பகிரப்பட்டன. முற்போக்காளர்கள் சூர்யாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளனர்.

இந்நிலையில் சூர்யாவின் இல்லத்துக்கு 5 ஆயுதம் ஏந்திய போலிஸார் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டனர். இப்போது சூர்யாவுக்கு என்று தனியாக இரண்டு போலிஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சூர்யா எங்கு சென்றாலும் பாதுகாப்புக்கு உடன் செல்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.