வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 28 டிசம்பர் 2019 (09:35 IST)

2019ன் டாப் 10 கவனம் பெற்ற படங்கள்

2019ம் ஆண்டில் வெளியாகி வசூல் அடிப்படையில் மிகப்பெரும் வெற்றி இல்லாவிட்டாலும், ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்ற படங்களையும், வசூல்+பாராட்டு இரண்டையும் பெற்ற படங்களையும் பற்றிய ஒரு சிறிய டாப் 10 பட்டியல்..

10. அடுத்த சாட்டை

2012ல் வெளிவந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றிபெற்ற திரைப்படம் சாட்டை. அந்த படத்தை இயக்கிய அன்பழகன் இயக்கிய படம்தான் இந்த ஆண்டு வெளியான ‘அடுத்த சாட்டை’. சமூக கருத்துக்களை பேசுவதற்கென்றே தமிழ் சினிமாவில் உள்ள சமுத்திரக்கனிதான் இதிலும் நடித்திருந்தார். சாட்டை படத்தில் பள்ளி மாணவர்களுக்காக குரல் கொடுத்த சமுத்திரக்கனி, இதில் கல்லூரி மாணவர்களுக்காக குரல் கொடுத்திருந்தார். ஆனாலும் வழக்கமான சமூக பொறுப்பு வசனங்களை மக்கள் அவ்வளவாக விரும்பாததால் வசூல் அளவில் படம் பின் தங்கினாலும் பலரது பாராட்டுகளை பெற்றது.

09. To Let

ஜோக்கர், பரதேசி உள்ளிட்ட படங்களை ஒளிப்பதிவு செய்த செழியன் இயக்கிய படம் ‘டூ லெட்’. வாடகை வீட்டில் வசிக்கும் நடுத்தர குடும்பம் பற்றிய கதை. வாடகை வீட்டில் வாழ்பவர்களின் அவலங்களையும், சொந்த வீடு குறித்த அவர்களது கனவுகளையும், நகரமயமாகும் சூழலில் அந்த கனவுகள் எப்படி கலைந்து போகின்றன என்பதையும் சமரசமின்றி பேசிய படம். 2017ல் சிறந்த படத்திற்கான தேசிய விருது பெற்ற இந்த படம் உலகளாவிய திரைப்பட விழாக்களிலும் பல்வேறு பரிசுகளை வென்றது.

08. சிவப்பு மஞ்சள் பச்சை

இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான படம் “சிவப்பு மஞ்சள் பச்சை”. அடித்து பறக்க விடும் ஆக்‌ஷன் காட்சிகள் இல்லாமலே சுவாரஸ்யமான கதைகள் சொல்பவர் சசி. ஜி.வி.பிரகாஷ், சித்தார்த் நடித்த இந்த படமும் குடும்பங்களால் ரசிக்க கூடிய அக்கா – தம்பி உறவுநிலை சிக்கல்களை பேசக்கூடிய சிம்பிள் கமர்ஷியல் படமாக அமைந்தது. விமர்சனம் + வசூல் இரண்டிலுமே சேதாரம் இல்லாமல் சுமாரான வரவேற்பை பெற்றது இந்த படம்.

07. பேரன்பு

இயக்குனர் ராம் இயக்கத்தில் மலையாள நடிகர் மம்மூட்டி நடித்து வெளியான படம் ‘பேரன்பு’. தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட தன் பெண்ணை காப்பாற்றும் தந்தை அமுதவாணனாக நடிப்பில் அசத்தினார் மம்மூட்டி. தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணாக ’தங்க மீன்கள்’ சாதனா நடித்திருந்தார். பல்வேறு உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்ற இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் வசூலில் சோபிக்காவிட்டாலும் நல்ல வரவேற்பை பெற்றது.

06. கொலைகாரன்

ஜப்பானிய நாவலான சஸ்பெக்ட் எக்ஸ் என்ற நாவல் அதே பெயரில் ஜப்பான் படமாக வெளியானது. அந்த கதையை அதிகாரப்பூர்வமாக தமிழில் கொணர்ந்து எடுக்கப்பட்ட படம்தான் கொலைகாரன். அர்ஜூன், விஜய் ஆண்டனி நடித்த இந்த படம் கிட்டத்தட்ட பாபநாசம் போலவே பல ட்விஸ்டுகளை கொண்டது. கட்ட கடைசியாக நடந்தது என்ன என்பதை காட்டும்போது பார்வையாளர்கள் ஆச்சர்யமடைந்தாலும், சஸ்பென்ஸ் த்ரில்லர் வகையான இந்த படம் குடும்ப படங்கள் அளவுக்கு மக்களை ஈர்க்கவில்லை.

05. கேம் ஓவர்

இதுவும் ஒரு சைக்கோ த்ரில்லர் வகை படமே! பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்கள் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள சமயத்தில் இந்த படம் வெளியானது. தமிழில் நயந்தாராவை வைத்து ‘மாயா’ என்னும் ஹிட் படத்தை கொடுத்த அஸ்வின் இயக்கிய படம்தான் ‘கேம் ஓவர்’. கேம்களில் வருவதுபோல இறந்தால் திரும்பி வர மூன்று வாய்ப்புகள் உண்டு. அதற்குள் தன்னை கொல்ல வரும் சைக்கோ கொலைகாரனிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்ற காட்டாயத்தில் டாப்ஸி. இந்த கருவை மையமாக வைத்து பயங்கரமான த்ரில்லராக வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றது கேம் ஓவர்.

04. மான்ஸ்டர்

முன்னதாக ஸ்பைடர் படத்தில் கொடூரமான சைக்கோ கொலைகாரனாக வந்து தமிழ் ரசிகர்களை வியக்க வைத்த எஸ்.ஜே.சூர்யா எலிக்கு பயந்து நடுங்கும் மிடில் கிளாஸ் அஞ்சனம் அழகிய பிள்ளையாக கலக்கி இருந்தார். நெல்சன் வெங்கடேசன் இயக்கிய இந்த படத்தில் ஜோடியாக பிரியா பவானி சங்கர், நண்பனாக கருணாகரன் நடித்திருந்தனர். குடும்பத்தோடு பார்க்கக்கூடிய நல்ல கமர்ஷியல் படமான மான்ஸ்டர் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரின் பாராட்டால் நல்ல வரவேற்பை பெற்றது.

03. தடம்

அருண் விஜய்க்கு மற்றுமொரு டர்னிங் பேக்காக அமைந்த படம் தடம். அருண் விஜய்யை வைத்து ‘தடையற தாக்க’ என்ற ஆக்‌ஷன் பேக் கமர்ஷியல் ஹிட் கொடுத்த மகிழ் திருமேனியே இந்த படத்தையும் எழுதி இயக்கினார். மீகாமன் படத்தினால் இடறிய மகிழ் திருமேனிக்கு இந்த படம் நல்ல திருப்பு முனையாக அமைந்தது. காதல் கதையை சுற்றி புனையப்பட்ட சஸ்பென்ஸ் கதையாக தடம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரிதியாகவும் நல்ல வெற்றியை பெற்றது.

02. ஒத்த செருப்பு

எப்போதும் எல்லா படங்களிலும் வித்தியாசம் காட்டி வரும் இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் இந்த வருடம் வெளியான படம்தான் ‘ஒத்த செருப்பு’. படத்தில் பார்த்திபன் என்ற ஒரு கதாப்பாத்திரம் மட்டுமே முழுவதுமாக இருந்தாலும், ஒரு அறைக்குள்ளேயே கேமரா சுழன்றாலும் கதையை சுவாரஸ்யமாக சொல்வதில் பெரும் வெற்றி அடைந்தார் பார்த்திபன். ஆனாலும் ஒரே கதாப்பாத்திரத்தை தொடர்ந்து பார்த்து கொண்டே இருக்க வேண்டிய அயர்ச்சியின் காரணமாக பலர் இந்த படத்தை அவ்வளவாக ரசிக்கவில்லை. எனினும் விமர்சனரீதியாக பல பாராட்டுகளை பெற்றது ஒத்த செருப்பு.

01 சூப்பர் டீலக்ஸ்

2011ம் ஆண்டு ‘ஆரண்ய காண்டம்’ என்றொரு ஹிட் படம். தியேட்டரில் படம் ஓடாவிட்டாலும் திரை விமர்சகர்களாலும், சினிமா விரும்பிகளாலும் திரும்ப திரும்ப பேசப்பட்ட ஒரு படம். பல்வேறு விருதுகளை பெற்ற படம். இந்த இயக்குனர் மீண்டும் எப்போது படம் எடுப்பார் என பலரும் காத்திருந்தனர். அந்த காத்திருப்புக்கு பதில் சொல்லும் வகையில் இந்த ஆண்டு வெளியானதுதான் ‘சூப்பர் டீலக்ஸ்’. தமிழ் சினிமாவின் மரபுகளை மீறி கதை சொல்பவர்களில் முக்கியமானவர் தியாகராஜ குமாரராஜா. இந்த படத்திலும் அதே உத்தியை பயன்படுத்தியிருந்தார். இது சயின்ஸ் பிக்சன் படமா, லூப் கதையா என எதையுமே புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் ரசிகர்கள் பலர் சூப்பர் டீலக்ஸை ஏற்றுக் கொண்டனர். ஜனரஞ்சக படமாக சோபிக்காத சூப்பர் டீலக்ஸ் இந்த வருடத்தில் அதன் காட்சிகளுக்காக, இசையமைப்புக்காக மிக அதிகமாக பேசப்பட்ட படமாக முதல் இடத்தில் உள்ளது.