பிரபாகரனை குறிப்பிட்டு காட்சி அமைக்கப்பட்டதா? – துல்கர் சல்மான் விளக்கம்!
மலையாளப்படத்தில் பிரபாகரன் குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றதாக பிரச்சினை எழுந்துள்ள சமயத்தில் துல்கர் சல்மான் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகியுள்ள படம் “வரனே அவசியமுண்ட”. இந்த படத்தில் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்த துல்கர் சல்மான் அதில் இடம்பெறும் வளர்ப்பு நாய்க்கு ”பிரபாகரன்” என பெயரிட்டிருப்பதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது. நாய்க்கு பிரபாகரன் என பெயரிட்டிருப்பது தமிழர்களையும், அவர்களது உரிமை போரையும் இழிவுபடுத்துவதாக பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நடிகர் துல்கர் சல்மான் ”வரனே அவஷ்யமுண்டு படத்தில் இடம்பெறும் பிரபாகரன் காமெடி தமிழ் மக்களை இகழும் பொருட்டோ, வேறு எந்த உள்நோக்கத்துடனோ வைக்கப்பட்டது அல்ல. பழைய மலையாள படமான பட்டண பிரவேசம் படத்தில் இடம்பெற்ற நகைச்சுவையை சார்ந்து இந்த காட்சி இதில் இடம்பெற்றுள்ளது. மேலும் பிரபாகரன் என்ற பெயர் கேரளாவில் பொதுவான பெயர். யாரையும் குறிப்பிடும் எண்ணத்தில் அதை வைக்கவில்லை” என விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் “தவறு என் மீதோ, இயக்குனர் மீதோ இருப்பதாக கருதினால் எங்களை திட்டுங்கள். ஆனால் எனது தந்தையாரையோ, குடும்பத்தையோ இதில் இழுக்காதீர்கள்” என கூறியுள்ளார்.