தமிழில் மொழிபெயர்த்த அன்பருக்கு நன்றி - நடிகர் கார்த்தி டுவீட்
மத்திய அரசு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டில் கொண்டுவந்துள்ள புதிய வரைவு-2020 க்கு எதிராக சமூக ஆர்வலர்கள் பலர் குரல் எழுப்பி வருகின்றனர். இதனால் இயற்கை வளங்கள் அழியும் என அச்சம் நிலவுகிறது. அதேசமயம் பாஜகவினர் இதனால் பெரிய பாதிப்புகள் எதுவுமே இல்லை. விதிகளில் மட்டுமே சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. சிலர் தவறான தகவலை பரப்புகிறார்கள் எனவும் கூறி வருகின்றனர்.’
இந்நிலையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு குறித்து நடிகர் கார்த்தி நடத்தி வரும் உழவன் ஃபவுண்டேசன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்ட வரைவு சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது போல தோன்றுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த வரைவை செயல்படுத்துவதற்கு முன்னர் மக்கள், ஆய்வாளர்கள் மற்றும் அறிஞர்களின் கருத்துகளை கேட்க வேண்டும் எனவும் அந்த அறிக்கை மூலமாக கார்த்தி தெரிவித்திருந்தார்.
கார்த்தியின் இந்த அறிக்கைக்கு ஆதரவாக பதிவிட்டுள்ள நடிகர் சூர்யா “பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம்..” என கூறியுள்ளார். இதை தொடர்ந்து அவரது ரசிகர்கள் பலர் அவரது ட்வீட்டை ஷேர் செய்து #EIA2020 என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்தனர்.
இந்நிலையில், ஆங்கிலம் மற்றும் இந்தியில் வெளிவந்த சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கையை தமிழில் மொழிபெயர்த்த அன்பர்களுக்கு நன்றி என கார்த்தி தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.