தல-தளபதி இயக்குனர் படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாட்டம்
சர்கார் படபிடிப்புத் தளத்தில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் படக்குழுவினரோடு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார்.
2001 ஆம் ஆண்டு வெளியான தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏ ஆர் முருகதாஸ். கேங்ஸ்டர் படமான அதில் அஜித் ஒரு கோபக்கார இளைஞனாக நடித்திருந்தார். அஜித்தின் சினிமா வாழக்கையில் திருப்புமுனை படமாக அமைந்தது தீனா. அந்த படத்திற்குப் பிறகே அஜித், ரசிகர்களால் தல என்று அழைக்கப்பட்டார். அப்படத்திற்குப் பிறகு இயக்குனர் முருகதாஸ் தொட்டதெல்லாம் ஹிட்டுதான். விஜயகாந்துடன் ரமணா(அநேகமாக விஜயகாந்தின் கடைசி ஹிட்), தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் ஸ்டாலின் எனப் பல்வேறு களங்களில் புகுந்து விளையாடினார். அதற்கடுத்து சூர்யாவை வைத்து அவர் இயக்கிய படமான கஜினி மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார்.
தற்போது தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலேயே முக்கியமான இயக்குனராக அறியப்படுகிறார் ஏ ஆர் முருகதாஸ். பொதுவாக தென்னிந்திய இயக்குனர்கள் பாலிவுட்டில் ஜொலிப்பது கடினமாக இருந்து வந்தது. பாலச்சந்தர், பாக்யராஜ் போன்ற வெகுசிலரே அங்கேயும் திறமையை நிரூபித்து தங்கள் கொடியை நாட்டினர். பல வருடங்களுக்கு பிறகு பாலிவுட்டில் வெற்றிபெற்ற தமிழ் இயக்குனர் முருகதாஸே ஆவார். அவரது முதல் இந்தி படமான கஜினி இந்தியாவின் முதல் 200 கோடி பாக்ஸ் ஆஃபிஸ் படம் என்ற சாதனையை நிகழ்த்தியது.. இந்தியாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனர்களில் ஒருவரானார் முருகதாஸ். அதன் பிறகு பாலிவுட், கோலிவுட் மற்றும் டோலிவுட் என மூன்று திரை உலகிலும் உள்ள முன்னனி நடிகர்கள் எல்லோரும் முருகதாஸின் இயக்கத்தில் நடிக்க காத்துக் கொண்டிருக்கின்றனர்.
தற்போது தமிழில் விஜய்யை வைத்து சர்கார் படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் முருகதாஸ் அப்படத்தை தீபாவளி வெளியீடாகக் கொண்டு வரும் முனைப்பில் படப்பிடிப்பினை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரது பிறந்த தினத்தை (செப்-25) முன்னிட்டு படபிடிப்பு தளத்திலேயே தனது பிறந்த நாளைக் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். மேலும் ரஜினியின் அடுத்த படத்தின் இயக்குனரும் முருகதாஸே என தகவல்கள் பரவி வருகின்றன.