புத்தர் மடி மெத்தையடி.. ஆடி விளையாடம்மா – மன்னிப்பு கேட்ட நடிகை
பிரபல எழுத்தாளரும் நடிகையுமான தஹிரா காஷ்யப் புத்தர் மடியில் அமர்ந்து புகைப்படம் எடுத்தது சர்ச்சைக்குள்ளானதை அடுத்து அவர் அந்த பதிவை நீக்கியதோடு, மன்னிப்பும் கேட்டுள்ளார்.
இந்தியில் எழுத்தாளரும், திரைப்பட இயக்குனராகவும் வலம் வருபவர் தஹிரா காஷ்யப். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் சுற்றுலா சென்ற இவர் ஒரு பெரிய புத்தர் சிலையின் மடியில் அமர்ந்தபடி புகைப்படம் எடுத்துள்ளார். அதை இன்ஸ்டாக்ராமில் பதிவும் செய்துள்ளார்.
அதை பார்த்து கடுப்பான பலர் அவரை கமெண்டிலேயே திட்டியுள்ளனர். மேலும் அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து சமூக வலைதளங்களில் பரவலாக பகிர்ந்துள்ளனர். இது புத்தரை இழிவுப்படுத்துவது போல் உள்ளது என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அந்த புகைப்படத்தை இன்ஸ்டாக்ராமிலிருந்து நீக்கிய தஹிரா “யாரையும் அவமானப்படுத்தவோ, புண்பட செய்யவோ அதை நான் பகிரவில்லை. தவறான புரிதலுக்கு என் மன்னிப்பை தெரிவித்து கொள்கிறேன்.” என்று மன்னிப்பு கேட்டுள்ளார். தஹிரா சில ஆண்டுகளுக்கு முன் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பின்னர் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு பிழைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.