புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 15 நவம்பர் 2021 (13:23 IST)

திருமாவளவனுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை விட்ட சூர்யா!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் நேற்று சூர்யாவின் ’ஜெய்பீம்’ படத்தை பாராட்டி இரண்டு பக்க அறிக்கை ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் திருமாவளவனுக்கு  பதிலளிக்கும் வகையில் சூர்யா சற்று முன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
மக்கள் தொகையில் மிக சிறுபான்மையினராக இருக்கும் பழங்குடியின நலன் சார்ந்து தாங்களும் தங்கள் இயக்கமும் தொடர்ந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கின்றது. தாங்கள் குறிப்பிட்டதை போல மாண்புமிகு தமிழக முதல்வர் பழங்குடியின மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு தீர்வுகாண உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது அனைவருக்கும் மிகுந்த மனநிறைவை தந்துள்ளது. 
 
பாதிக்கப்படும் மக்களின் பிரச்சினைகளை அனைவரிடமும் கொண்டு போய் சேர்ப்பது மட்டுமே ’ஜெய்பீம்’ திரைப்படத்தின் நோக்கம். கவனப்படுத்துவது மட்டுமே படைப்பின் மூலம் சாத்தியம். உண்மையான சமூக மாற்றங்களை அரசும் அரசியல் இயக்கங்களும் மட்டுமே உருவாக்க முடியும். ஊக்கமூட்டும் தங்களது வார்த்தைகளுக்கு நன்றி என சூர்யா குறிப்பிட்டுள்ளார்.