ஆஸ்கர் பட்டியலில் சூர்யாவின் கங்குவா… பின்னணி என்ன?
சூர்யா நடிப்பில் உருவான கங்குவா திரைப்படம் பெரிய பில்டப்புகளுக்கு மத்தியில் ரிலிஸாகி படுதோல்விப் படமானது. சூர்யாவின் மூன்று ஆண்டுகால உழைப்பு வீணாக்கப்பட்டுள்ளது என அவரின் ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர். சூர்யா கடைசியாக திரையரங்குகளில் ஒரு வணிக ரீதியான வெற்றிப்படம் கொடுத்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது எனப் புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இந்த படம் மொத்தமாக திரையரங்குகள் மூலமாக 100 கோடி ரூபாய் அளவுக்குக் கூட வசூலிக்கவில்லை என சொல்லப்படுகிறது. ஆனால் படத்தின் பட்ஜெட் 200 கோடி ரூபாய்க்கு மேல் என சொல்லப்படுகிறது.
இது ஒருபக்கம் என்றால் படத்தின் மோசமான உருவாக்கத்தால் கடுப்பான ரசிகர்கள் சமூகவலைதளங்களில் படத்தைக் கடுமையாக கேலி செய்தனர். சூர்யா, சிவா மற்றும் ஞானவேல் ராஜா ஆகிய மூவரையும் பல விதங்களில் கேலி செய்து வந்தனர். ஆனாலும் இந்த படம் தமிழ்நாட்டில் 30 கோடி ரூபாய் அளவுக்குக் கூட வசூல் செய்யவில்லை என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படம் தற்போது ஆஸ்கர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறித்து தகவல்கள் வெளியாகி ரசிகர்களைக் குழப்பமடைய வைத்துள்ளது. கங்குவா திரைப்படம் நேரடியாக தயாரிப்பாளரால் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எந்த தயாரிப்பாளரும் ஆஸ்கர் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணத்தைக் கட்டிவிட்டு படிவத்தை நிரப்பி அனுப்பினால் அந்த படம் பட்டியலில் இடம்பெறும் என்று சொல்லப்படுகிறது. அப்படிதான் கங்குவா சென்றுள்ளது. இந்தியா சார்பாக அரசால் அனுப்பப்பட்ட லாபட்டா லேடீஸ் திரைப்படம் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.