வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (07:07 IST)

நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த சுந்தர் சி!

தமிழ் திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' எனும் திரைப்படத்தை நட்சத்திர இயக்குநர் சுந்தர். சி இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 
 
இயக்குநரும், நடிகருமான சுந்தர். சி இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'அரண்மனை 4'  படத்தைத் தொடர்ந்து அவரது இயக்கத்தில் 'மூக்குத்தி அம்மன் 2' படம் உருவாகிறது. தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா முதன்மையான வேடத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் ரசிகர்களுக்கு திரையரங்குகளில் புதுவிதமான அனுபவத்தை வழங்குவதற்காக படக்குழுவினர் தெளிவாக திட்டமிட்டு பணியாற்றி வருகிறார்கள். டிவைன் ஃபேண்டஸி  ஜானரில் உருவாகும் இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. 
 
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் அவ்னி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அஸோஸியேட் ஆகிறது.
 
ஐ வி ஓய் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் இஷான் சக்சேனா, சுனில் ஷா மற்றும் ராஜா சுப்பிரமணியன் தலைமையிலான பி ஃபோர் யூ மோஷன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணை தயாரிப்பாளராக பங்களிப்பு செய்கிறது. 
 
 'அரண்மனை' பட வரிசையில் வெளியான நான்கு பாகங்களையும் இயக்கி வெற்றி பெற்ற அனுபவம் கொண்ட இயக்குநர் சுந்தர் சி- வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2 'எனும் திரைப்படத்தினை இயக்குவதால், இந்தத் திரைப்படமும் நிச்சயமாக பிளாக் பஸ்டர் ஹிட்டாக அமையும் என நம்பிக்கையுடன் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த திரைப்படம் 'மூக்குத்தி அம்மன்' படத்தின் முதல் பாகத்தை விட, பல அற்புதமான திரையரங்க அனுபவ தருணங்களை வழங்கும் வகையில் உருவாகிறது. 
 
இந்தத் திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். 
 
சுந்தர் சி - வேல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் -நயன்தாரா கூட்டணியில் உருவாகும் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்திற்கு பார்வையாளர்களிடையேயும், திரையுலக வணிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.