சுந்தர் சியோடு மோதும் அனுராக் காஷ்யப்… எப்படி இருக்கு ‘ஒன் டு ஒன்’ டிரைலர்!
இயக்குனர் அனுராக் காஷ்யப் இந்தி சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக கருதப்படுபவர்.இதற்கு முன்பு அவர் முருகதாஸ் இயக்கிய பாலிவுட் படத்தில் சோனாக்ஷி சின்ஹாவுக்கு வில்லனாக நடித்திருந்தார். அதன் பின்னர் தமிழில் நயன்தாரா, அதர்வா ஆகியோர் நடிப்பில் உருவான இமைக்கா நொடிகள் படத்திலும் வில்லனாக தோன்றியிருந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற விஜய் சேதிபதியின் மகாராஜா திரைப்படத்தில் அவர் கொடூரமான வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். இதையடுத்து இன்னும் சில ஆண்டுகளுக்கு அவரைத் தமிழ் சினிமாவில் கொடூர வில்லனாக பார்க்கலாம் என்று கருத்துகள் எழுந்துள்ளன.
இத்ற்கிடையில் அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் சுந்தர் சி கதாநாயகனாக நடிப்பில் உருவாகியுள்ள ஒன் டு ஒன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை திரிஷா நடித்த பரமபத விளையாட்டு திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் திருஞானம் இயக்கி இருந்தார்.
இந்நிலையில் இப்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. படத்தின் தலைப்புக்கு ஏற்றார் போல அனுராக் காஷ்யப் vs சுந்தர் சி மோதலாக டிரைலரில் காட்சிகள் தொகுக்கப்பட்டுள்ளன. ஒரு சைக்கோவிடம் மாட்டிக்கொண்டு அவஸ்தைப் படும் நபராக சுந்தர் சி இருப்பார் என்று தோன்றுகின்றது. டிரைலரில் காட்சிகள் பிரம்மாண்டமாக இருந்தாலும் வசனங்கள் மிகவும் அமெச்சூராக உள்ளன. பின்னணி இசையும் கேஜிஎஃப் படத்தின் இசையை சுட்டது போல உள்ளது.