வெள்ளி, 6 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 17 நவம்பர் 2018 (19:44 IST)

18 வருடங்களுக்கு முன்னால் நடந்த ஒரு கதை திருட்டு – கோலிவுட் பரிதாபங்கள்

தற்போது கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வரும் கதை திருட்டு சர்ச்சை திருட்டு விவகாரம் இன்று நேற்று ஆரம்பித்தது இல்லை. காலம் காலமாக நடந்து வருவதுதான். அப்படிபட்ட ஒரு கதை திருட்டைப் பற்றிய மி டூ பதிவுதான் இது.

தற்போது கோலிவுட்டின் வசூல் சக்ரவர்த்தியாக இருந்து வரும் நடிகர்(அப்போது வளர்ந்து வரும் அழகான இளம் நடிகர்) ஒருவருக்கு மிகப்பெரிய இயக்குனர் ஒருவரின் உதவி இயக்குனர் ஒரு கதை சொல்கிறார். நடிகருக்கோ கதை ரொம்பவே பிடித்துப் போகிறது. அந்த நடிகர் அப்போது வரிசையாக காதல் படங்களில் நடித்து சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருந்தவர். இனிமேலும் சாக்லேட் பாய் இமேஜ் வேண்டாம் ஆக்‌ஷன் ஹீரோவாக வேண்டும் என முடிவெடுத்து அதற்கேற்றார் போல கதைகளை தேடிக் கொண்டிருந்த காலம். அந்த நேரம் பார்த்து ஊருக்காக போராடும் ஒரு இளைஞன் கதாபாத்திரம். தவறு செய்பவர்களைக் கடத்தி வித்யாசமான தண்டனை கொடுக்கும் கதாபாத்திரம். உடனே டிக் அடித்தார் கதையை!

ஒரு மிகப்பெரிய ஜாம்பவான் இயக்குனரின் தயாரிப்பில் அந்த படத்தைத் தயாரிப்பது என முடிவானது. நடிகர் மற்றும் இயக்குனருக்கு அட்வான்ஸும் கொடுக்கப்பட்டது. இடையில் தயாரிப்பாளருக்கும் நடிகருக்கும் இடையில் ஏற்பட்ட முட்டல் மோதலால் நடிகர் படத்தில் இருந்து வெளியேறினார்.

படத்தை விட்டு வெளியேறினாலும் நடிகரால் அந்த கதையில் இருந்து வெளியேற முடியவில்லை. மனதில் உறுத்திக் கொண்டே இருந்த அந்த கதையை மட்டும் வைத்துக் கொண்டு திரைக்கதையை அங்கங்கே மாற்றி தன்னிடம் கதை சொன்ன இயக்குனரின் உதவி இயக்குனரை வைத்தே அந்த படத்தை தனது ஆஸ்தான தயாரிப்பாளரின் தயாரிப்பில் உருவாக்கினார். இதற்கிடையில் நடிகருக்கு கதை சொன்ன இயக்குனர் வேறொரு வளர்ந்து வரும் நடிகரை வைத்து படத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

நடிகர் நடித்த அந்தப்படம் 2001 ஆம் மத்தியில் வெளியானது. படத்தைப் பார்த்த இயக்குனருக்கோ பேரதிர்ச்சி.  அந்த நடிகரை தொடர்பு கொள்ள முயன்ற போது நடிகர் தொடர்பு எல்லைக்கு அப்பால். மனதொடிந்து போனார் இயக்குனர். இதற்கிடையில் தான் ஒப்பந்தம் செய்து வைத்துள்ள நடிகரை வைத்து படம் பண்ண வேண்டிய கட்டாயம். தான் ஆசை ஆசையாக உருவாக்கிய கதையை விட மன்சில்லாமல் தன் கதையில் சில மாற்றங்களை செய்து அந்த படத்தை எடுத்து முடித்தார். ஆனால் படம் பெரிய தோல்வியடைந்தது. இவரிடம் இருந்து திருடப்பட்ட கதையில் உருவான முந்தைய படம் சூப்பர் ஹிட். அந்த நடிகரின் திரை வாழ்க்கையில் இன்றளவும் பேர் சொல்லும் படம்.

அதன் பின்னர் கதையைப் பறிகொடுத்த இயக்குனர் தனக்கான ரூட்டை மாற்றிக்கொண்டு குறைந்த பட்ஜெட்டில் மிகச்சிறந்த படங்களை எடுத்து வருகிறார். நடிகரோ  இன்று தமிழ்நாட்டில் சிறந்த குடிமகனாகவும் கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகர் என்ற நிலையையும் அடைந்துள்ளார். தனது இயக்குனருக்கு துரோகம் செய்து படத்தை இயக்கிக் கொடுத்த உதவி இயக்குனரோ ஒரு சில படங்களுக்குப் பிறகு காணாமல் போய் விட்டார்.