மகாராஜா படம் பார்த்துட்டு என் மனைவி என்ன சொல்லப்போறாரோ தெரியல- நடிகர் சிங்கம் புலி!
விஜய் சேதுபதியின் 50 ஆவது படமான மகாராஜா இன்று வெளியாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வெற்றிகரமாக ஓடிவருகிறது. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ் நட்டி மற்றும் பாய்ஸ் மணிகண்டன் மற்றும் சிங்கம்புலிஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த படங்கள் எதுவுமே ஓடவில்லை என்பதால் இந்த வெற்றி அவருக்கு மிகவும் முக்கியமானதாக அமையும். படத்தின் முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்வதாகவும், அதிலும் குறிப்பாக க்ளைமேக்ஸ் காட்சி எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் படம் அந்த கிளைமேக்ஸ் காட்சிக்காக அதீத டிராமவை கொண்டு செயற்கை தன்மை கொண்டுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதுவரை நகைச்சுவை நடிகராக அறியப்பட்ட சிங்கம்புலி இந்த படத்தில் ஒரு பாலியல் வல்லுறவாளனாக நடித்து ரசிகர்களை திடுக்கிட வைத்துள்ளார். படத்தில் அவர் ஒரு சிறுமியை வல்லுறவு செய்யும் காட்சிகள் அவர் மீது கோபம் வரவழைக்கும் விதமாக உள்ளன. இந்நிலையில் இந்த படத்தைப் பற்றியும் தன்னுடைய கதாபாத்திரம் பற்றியும் ஒரு நேர்காணலில் பேசியுள்ளார்.
அதில் “இந்த படத்தை என்னுடைய பசங்க பாத்துவிட்டார்கள். அவர்களுக்கு இது நல்லதா கெட்டதா என்று தெரியவில்லை. எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. என் மனைவி இன்னும் பார்க்கவில்லை. அவர் பார்த்துவிட்டு என்ன சொல்லப் போகிறார் என்று தெரியவில்லை. அதைதான் நான் ஃபேஸ்(face) செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.