சர்ச்சைகளை நொறுக்கி தள்ளிய சிம்பு : ரசிகர்கள் கொண்டாடும் செக்க சிவந்த வானம்
இன்று வெளியான செக்கச் சிவந்த வானம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக இதில் நடித்துள்ள சிம்புவின் நடிப்பு அட்டகாசமாக இருப்பதாக சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி மற்றும் விஜய் சேதுபதி என தமிழின் முன்னணி நடிகர்கள் நடித்து இன்று வெளியாகியிருக்கிறது செக்கச் சிவந்த வானம். முன்பே வெளியான பாடல்கள் மற்றும் டிரெயிலர் மூலம் இந்த திரைப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது.
பீப் பாடல் மற்றும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் மிகப்பெரிய தோல்வி எனப் பல சர்ச்சைகளை சந்தித்து வந்தார் சிம்பு. அது மட்டுமல்லாமல் அ.அ.அ படத்தின் தோல்விக்கு சிம்புவே முழுக் காரணம் எனக்கூறி அந்த படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனரும் குற்றம் சாட்டியதை அடுத்து சிம்புவுக்கு நடிகர் சங்கம் தடை எனப் பலப்பல எதிர்மறை விமர்சனங்கள் அவர்மீது வைக்கப்பட்டன.
ஆனால் அவையெல்லாவற்றிற்கும் பதில் சொல்லாமல் மௌனமாக செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்து வந்தார் சிம்பு. அதோடு இப்படத்தின் படப்பிடிப்பிற்கு காலம் தாழ்த்தாமல், சமத்து பையனாக அவர் நடித்து கொடுத்தார் என செய்தி வெளியானது. மணிரத்னமே அவரை பாராட்டியதாகவும் செய்தி வெளியானது.
தன்மீதான விமர்சனங்களை உடைத்தெறியும் விதமாக சிம்புவின் நடிப்பு இப்படத்தில் உள்ளதாகவும், தனது நடிப்பின் மூலம் தன் மீது குற்றச்சாட்டு வைத்தவர்களுக்கு பதில் கூறியுள்ளதாகவும் படம் பார்த்து வந்த ரசிகர்கள் மகிழ்ச்சியோடு தெரிவித்திருக்கின்றனர்.
மேலும் ‘சிம்பு ஈஸ் பேக்’ என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தப்படம் இன்று காலை அறுபதுக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் அதிகாலை சிறப்புக்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.