வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (16:07 IST)

சீமான் பாராட்டிய லேட்டஸ்ட் தமிழ்ப்படம்… வைரலாகும் வாழ்த்து!

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் தமிழ் இயக்கிய டாணாகாரன் திரைப்படம் ஏப்ரல் 8 ஆம் தேதி ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் ஆனது.

நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘டாணாக்காரன்’ திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. காவல்துறை பயிற்சி பள்ளியில் நடக்கும் ஆதிக்கமும் ஒடுக்குமுறையும் இந்த படத்தில் சிறப்பாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளன என்று ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் டாணாகாரன் திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘வெள்ளையர்கள் உருவாக்கிவிட்டுப் போன பழமையான அமைப்பு முறைகளில் ஒன்றே காவல்துறை எனும் அரசு எந்திரம். அன்றிலிருந்து இன்றுவரை ஆளும் அரசுகளின் கருவியாகச் செயல்பட்டு வரும் காவல்துறையில், புரையோடிப் போயிருக்கும் ஆதிக்கப் படிநிலைகளை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுகிறது, தம்பி தமிழ் இயக்கி நேற்று வெளிவந்திருக்கும் ‘டாணாக்காரன்’ திரைப்படம்.

1982ம் ஆண்டில் காவல் பணிக்குத் தேர்வானவர்கள், பின்பு தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தால் நிராகரிக்கப்பட்டு, 15 ஆண்டுகள் வழக்கு, நீதிமன்றம், எனப் பல்வேறு போராட்டங்கள் நடத்தி, அலைக்கழிப்புகளுக்கு ஆளாகிப் பிறகு, 1998ம் ஆண்டில் நியமனம் பெற்று காவலர் பயிற்சிப் பள்ளிக்கு வருவதில் தொடங்குகிறது ’டாணாக்காரன்’ திரைப்படம். அங்கிருந்து தொடங்கும் உண்மைக்கு நெருக்கமான திரைக்கதையோட்டம் கடைசிக் காட்சிவரை நீண்டு படத்தோடு பார்வையாளர்களைக் கட்டிப்போடுகிறது.
தனித்துவம் மிக்க இக்கதைக் களத்தைத் தெரிவு செய்து, திறம்பட அதற்கான திரைக்கதையை வடிவமைத்திருப்பதே பெரும் பாராட்டிற்குரியது. திரைப்படங்கள் கண்டு திரைப்படங்கள் உருவாக்குவதைவிட, பெற்ற வாழ்வனுபவங்களிலிருந்து கதைக்களங்களையும், கதை மாந்தர்களையும் உருவாக்குவதே சிறந்த படைப்பாக முடியும் என்பதற்கும், உண்மைக்கு நெருக்கமாகவும் உணர்வுத் துடிப்போடும் அப்படிப்பட்ட படங்களே அமையும் என்பதற்கும், ’டாணாக்காரன்’ திரைப்படம் இன்னொரு சிறந்த எடுத்துக்காட்டாகி இருக்கிறது.

திரைக்கதை இறுதி செய்யப்பட்ட பிறகு, ஒரு திரைப்பட உருவாக்கத்தில் கதாப்பாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிகர்களைத் தேர்ந்தெடுப்பதும்; கதைக்களத்திற்குத் தகுந்த தொழில்நுட்பக் கலைஞர்களைப் பங்கேற்கச் செய்வதும்; படப்பிடிப்பிற்கு ஏற்ற இடங்களை முடிவு செய்வதுமான முன் தயாரிப்புப் பணிகள் மிக முக்கியமானவை. காட்சி ஊடகமான திரைப்படத்தின் ஒட்டுமொத்த வடிவத்தை, இந்த முன்தயாரிப்புப் பணிகளில் செலுத்தப்படும் உழைப்பும் அர்ப்பணிப்புமே பாதியளவு தீர்மானித்துவிடும். அவ்வகையில் ’டாணாக்காரன்’ திரைப்படத்தின் செம்மையான திரைக்கதையை எழுத்து வடிவத்திலிருந்து காட்சி வடிவமாக்க, இயக்குநர் தமிழ் அவர்கள் தேர்ந்தெடுத்த படப்பிடிப்புக் களம், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், என எல்லாமே, எல்லோருமே பொருந்தி வந்து பங்களித்திருப்பது தனிச்சிறப்பு.

’அறிவு’ கதாப்பாத்திரத்தின் முப்பரிமாணங்களையும் உணர்ந்து, காட்சிகளின் எல்லாவிதமான உணர்வு நிலைகளிலும் முழுமையாகத் தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தி, திரை வாழ்க்கையில் புதிய உயரத்தை எட்டியிருக்கிறார் என்னன்புத் தம்பி விக்ரம் பிரபு. நடிப்பின் இலக்கணம் தந்த அன்னை இல்லத்திற்குத் தன் நடிப்பால் பெருமை சேர்த்திருக்கிறார் விக்ரம்.

’திரைப்படம் – ஒரு நிகழ்கலை’ என்பது புரிந்து, அஞ்சலி, லால், எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட்,பிரகதீஸ்வரன், லிவிங்ஸ்டன், மதுசூதன், உதயபானு மகேஸ்வரன், பாவெல் நவகீதன், லிங்கேஷ் என ’டாணாக்காரன்’ நடிகர்கள் அனைவருமே தங்களின் கதாப்பாத்திரங்களைத் திறம்படக் கண்முன் நிகழ்த்தி முத்திரை பதிக்கிறார்கள்.
கதை மாந்தர்களுக்கு இடையேயான முரண்களைத் தெளிவாகக் கணித்து, அதற்கேற்றபடிக் காட்சிகளை அடுக்கித் திரைக்கதையின் உள்கட்டமைப்பை கூறுபோட்டிருக்கிறார் படத்தின் திரைக்கதையாளரான அன்புத்தம்பி தமிழ். அதுபோலவே, பெரும்பாலான காட்சிகள் ஒரே நிகழ்விடத்தில் இடம்பெறுவதை உள்வாங்கி, கொஞ்சம் பிசகினாலும் பார்வையாளர்களுக்கு அயற்சி ஏற்பட வாய்ப்பிருக்கும் சிக்கலை உணர்ந்து, நேர்த்தியாக வடிக்கப்பட்டிருக்கிறது அவர் திரைக்கதையின் வெளிக்கட்டமைப்பு. தமிழ் கொண்டு வந்த இந்த உள், வெளிக் கட்டமைப்புகளைத் தெளிவாகப் புரிந்துகொண்டுத் நுட்பமாகத் தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிலோமின்ராஜ்.

கதைக்களத்தின் நிலவியலை உள்வாங்கி, பெரும்பான்மைக் காட்சிகளை இயற்கையாகக் கிடைத்த ஒளியில் பதிவு செய்து, காட்சிகளின் ஊடாகப் பார்வையாளர்களையும் பங்கேற்கச் செய்து சிறப்பித்திருக்கிறார், ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம். ரசிக்க வைக்கும் பாடல்களிலும், பார்வையாளர்களைக் காட்சிகளோடு ஒன்றச் செய்து உணர்வூட்டும் பின்னணி இசையிலும் திரைக்கதைக்குப் பலம் சேர்த்து மெருகூட்டியிருக்கிறார், இசையமைப்பாளர் ஜிப்ரான்.

சரியான கதையைத் தேர்ந்தெடுத்து, இயக்குநரின் படைப்பாக்கத்திற்கு உற்ற துணையாய் இருந்து நிறைவு செய்திருக்கிறார்கள், தயாரிப்பாளர்களான, எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு, பி.கோபிநாத், ஆர்.தங்கபிரபாகரன், ஆகியோர்.

”இந்த அமைப்பு என்பது ஒரு முரட்டு வெள்ளைக்காரனுக்கும் முட்டாள்தனமான அரசியல்வாதிக்கும் பிறந்த குழந்தை. இங்கே நேர்மையாக நிற்க நினைப்பவர்கள்தான் சிரமங்களுக்குள்ளாக வேண்டும். இதை நாம்தான் மாற்ற வேண்டும். மக்களை நேசிக்கும் நீ அமைப்பிற்கு வெளியே போய் என்ன செய்வாய்? அதிகாரம் இல்லாத உணர்ச்சி உன்னை எரித்தே கொல்லும். அதிகாரம் வலிமையானது எனச் சட்டமேதை அம்பேத்கர் சொன்னது, அந்த அதிகாரத்தைக் கைப்பற்றதான். அதிகாரத்தைக் கைப்பற்றி அமைப்பை சரிசெய்துகொள்ளுங்கள். அமைப்பைச் சரிசெய்யவே நாம் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டியிருக்கிறது. வாழ்க தமிழ். வளர்க தமிழ்நாடு!” எனப் படத்தின் இறுதிக் காட்சியில் சட்ட ஆசிரியர், அறிவுக்குப் சொல்லும் உரையாடல், அரசியல் அதிகாரத்தின் தேவையையும் அதை எளியவர்கள் கைப்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துகிறது. இப்படித் திரைப்படம் முழுவதுமே உள்ளம் தொடும் அருமையான உரையாடல்களாலும் கவனம் ஈர்க்கிறார், அன்புத் தம்பி தமிழ்.

திரைப்படத்தின் கதை, திரைக்கதை, உரையாடல், இயக்கம், என அனைத்திலும் தனிமுத்திரை பதித்து, தமிழ்த் திரைப்படத் துறையில் தவிர்க்க முடியாப் புதிய தடம் பதித்திருக்கும் என்னன்பு இளவல் தமிழ் நெஞ்சாரத் தழுவிக்கொள்கிறேன். இந்த ‘டாணாக்காரன்’ திரைப்படத்திற்காக உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் பேரன்புமிக்கப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.