செவ்வாய், 10 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 14 செப்டம்பர் 2024 (08:06 IST)

‘இவ்வளவு நாள் கடன் எனும் பசியில் இருந்தேன்…’- தோல்வி படங்கள் தேர்வு குறித்து பேசிய சசிகுமார்!

தமிழ் சினிமாவில் மினிமம் கியாரண்டி நடிகராக இருந்த சசிகுமார் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து தோல்விப் படங்களாகக் கொடுத்துக் கொண்டிருந்தார். அதற்கு அவர் தேர்வு செய்த கதைகளே காரணம் என சொல்லப்பட்டது. இதனால் ஒரு கட்டத்தில் அவர் படங்கள் படுதோல்வி அடைந்த நிலையில் அயோத்தி என்ற படத்தின் மூலம் மீண்டும் நம்பிக்கைக் கொடுக்கும் நடிகராக மாறியுள்ளார்.

இதையடுத்து அவர் இப்போது உடன்பிறப்பே இயக்குனர் இரா சரவணன் இயக்கத்தில் ‘நந்தன்’ என்ற அழுத்தமானக் கதைக்களம் கொண்ட படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி ரிலீஸாகும் நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

முன்பு போல இல்லாமல் இப்போது நல்லக் கதைக்களன்களாக தேர்வு செய்ய தொடங்கியுள்ளதாக சொல்லும் சசிகுமார் ‘முன்பு ஏன் மோசமானக் கதைகளை தேர்வு செய்தேன் என சிலர் கேட்கிறார்கள். முன்பு எனக்கு நிறையக் கடன் இருந்தது. அதனால் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் சூழல் எனக்கு இல்லை.  கடன்காரர்களை நான் சமாளிக்க வேண்டும். இப்போது கடனில் இருந்து வெளியே வந்துவிட்டேன்.இப்போது கடன் எனும் பசியை நான் போக்கிவிட்டேன். இனிமேல் ருசியாக சாப்பிட்டு அந்த ருசியை ரசிகர்களுக்கும் கொடுக்க வேண்டும்.  அதுதான் அயோத்தி மற்றும் நந்தன் போன்ற படங்களை நான் தேர்வு செய்யக் காரணம்” எனக் கூறியுள்ளார்.