“போராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம்” - ரஜினியை தாக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்?
‘போராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம்’ என்று தெரிவித்துள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்.
“நான் 40 நாட்களுக்கு முன்பு இவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்களிடம் கேட்டபோது, விழா எப்போது? என்றவர், எங்கிருந்தாலும் வருவேன் என்றார். அவருக்கு நன்றி. காதலா, கோபமா, வீரமா, சமூக சிந்தனையா, மண் வாசனையா எதையும் வித்தியாசமான முறையில் எழுதுபவர் அவர்.
உலகமே வியக்கும் ஷங்கருக்கு, மெசேஜ்தான் அனுப்பினேன். உறுதியாக வருவேன் என்றார். அவருக்கு நன்றி. அவர் என்னிடம் புத்திசாலித்தனமாக இருந்தவர். அதனால்தான் என்னுடன் 17 படங்களில் பணியாற்ற முடிந்தது. இங்கே இருக்கும் ராஜேஷ், பொன்ராம் ஆகியோருக்கும் நன்றி.
இந்த விக்கி, என்னுடன் 6 ஆண்டுகள் இருந்தார். அவர் சொன்ன கதைகள் பிடிக்கவில்லை என்று சொல்லி வந்தேன். ஒருநாள் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கைக் கதையைப் படிக்கக் கொடுத்தார். இரவே படித்து விட்டேன். மறுநாளே, படமாக எடுக்கலாம் என்றேன். முடிவு செய்ததும், ஐந்தாறு முறை டிராபிக் ராமசாமியைப் போய்ப் பார்த்தேன். அவரது நடை, உடை, பாவனைகளை உற்று நோக்கினேன். எனக்குள் பொருத்திக் கொண்டேன்.
இது வாழ்க்கை முழுக்க போராடி வரும் ஒருவரின் கதை. போராட வயது தேவையில்லை. போராடாமல் எதுவும் கிடைக்காது. தாயிடம் பால் குடிக்க வேண்டும் என்றால் கூட, குழந்தை அழுதால்தான் கிடைக்கும், போராட வேண்டாம் என்றால் எப்படி? காந்தி போராடவில்லை என்றால், சுதந்திரம் கிடைத்து இருக்குமா? மெரினா போராட்டம்தானே நம் கலாச்சாரத்தை மீட்டு கொடுத்தது? தூத்துக்குடி போராட்டம்தானே ஒரு ஆலையை மூடவைத்தது? போராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம். டிராபிக் ராமசாமியிடம் நானும் நிறைய கற்றுக் கொண்டேன். இப்படம் ஒரு யதார்த்தமான பதிவாக இருக்கும்” என்றார்.