செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 11 டிசம்பர் 2018 (12:09 IST)

தனுஷுக்கு செக் வைத்த விஷ்ணு விஷால் – முழிக்கும் திரையரங்க உரிமையாளர்கள்

விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் படத்தின் விநியோக உரிமை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸுக்கு கைமாறியுள்ளது.

நடிகர் விஷ்ணு விஷால் வெண்ணிலாக் கபடிக்குழு மூலம் தமிழ்சினிமாவிற்குக் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். அதன் பிறகு நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து அதில் நடித்து வெற்றியும் பெற்று வருகிறார். மிகப்பெரிய மார்கெட் இல்லையென்றாலும் தன்னை நம்பிப் பணம் போடும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தாத ஹீரோவாக உருவாகியுள்ளார்.

இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் சிலுக்குவார்பட்டி சிங்கம் திரைப்படம் வரும் டிசம்பர் 21 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருந்தது. ஆனால் தனுஷின் மாரி 2 முன்னறிவிப்பில்லாமல் இந்த ரேஸில் இணைந்ததால் விஷ்ணுவின் படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் உருவானது. இதையடுத்து சிறு படத் தயாரிப்பாளர்கள் தமிழ் தயாரிப்பாளர் சங்கத்திடம் முறையிட்டனர். ஆனால் தனுஷ் சங்கத்துக்குக் கட்டுப்படாத காரணத்தால் டிசம்பர் 21 முதல் ஜனவரி 10 வரை யார் வேண்டுமானாலும் எந்தத் தேதியில் வேண்டுமானாலும் தங்கள் படத்தினை வெளியியிட்டுக் கொள்ளலாம் என கூறிவிட்டு கழண்டு கொண்டனர்.

இதனால் கடுப்பான விஷ்ணு விஷால் டிவிட்டரில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அதில் ’கட்டுப்பாடுகள்.. பின்பு மீறப்படும் கட்டுப்பாடுகள் … சட்டங்களை பின்பற்றும் நபர்களுக்கு இப்படிதான் நீதி கிடைக்குமா?..இது எனது படங்களுக்கு முதல்முறையாக இல்லை… இரண்டாவது முறையாக நடக்கின்றன… பின் எதற்காக விதிமுறைகள் ..?’ எனக் கூறியிருந்தார்.

இதையடுத்து தற்போது தனது படத்திற்குத் தியேட்டர் கிடைக்க உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸுக்கு தனது படத்தினைக் கைமாற்றியுள்ளார். ரெட் ஜெயிண்ட் மூவிஸுக்கு தமிழ்நாடு முழுவதும் பரவலான திரையரங்க உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். மேலும் பொங்கலுக்கு ரிலிஸாகும் பேட்ட படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை ரெட் ஜெயிண்ட்தான் கைப்பற்றியுள்ளது.

அதனால் இப்போது சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் படத்திற்குத் தியேட்டர்கள் ஒதுக்க வேண்டியக் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தனுஷின் மாரி 2 க்கு ஒதுக்கப்பட்ட தியேட்டர்களில் கணிசமானவை மீண்டும் சிலுக்குவார்ப்பட்டி சிங்கத்திற்கு ஒதுக்கப்படலாம் எனத் தெரிகிறது.