திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 7 அக்டோபர் 2019 (15:53 IST)

குருவுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து கொண்டிருந்த ரஜினிகாந்தை முதல்முறையாக ஹீரோவாக நடிக்க வைத்து அழகுபார்த்தவர் கலைஞானம். கே.பாலசந்தர் அவர்கள் ரஜினியின் ஒரு குரு என்றால், கலைஞானம் அவர்களும் அவருக்கு இன்னொரு குரு தான்.

இந்த நிலையில் கலைஞானம் அவர்களின் 75 ஆண்டுகால சினிமா பயணத்தை பாராட்டும் வகையில் அவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் பாராட்டு விழா ஒன்று நடைபெற்றது. இயக்குநர் பாரதிராஜா தலைமையில் நடந்த இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் உள்பட பல திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய சிவக்குமார், கலைஞானம் இன்னமும் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறார். அவருக்கு தமிழக அரசு ஒரு வீடு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதற்குப் பதில் அளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ கலைஞானத்திற்கு தமிழக அரசு வீடு வழங்க முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்படும் என்று தெரிவித்தார்

இந்த நிலையில் இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், கலைஞானம் இன்னமும் வாடகை வீட்டில் வசிக்கிறார் என்பது எனக்கு தெரியாமல் போய்விட்டது. அவருக்கு என் சொந்த செலவில் வீடு வாங்கித்தருவேன். அவருக்கு வீடு வாங்கித்தரும் வேலையை அரசுக்கு தர மாட்டேன்’ என்று கூறினார்.

அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் கொடுத்த வாக்குறுதியை இன்று அவர் நிறைவேற்றியுள்ளார். சென்னை விருகம்பாக்கத்தில் ரூ.45 லட்சம் மதிப்புள்ள 3 படுக்கையறை கொண்ட வீடு கலைஞானத்துக்கு இன்று ரஜினிகாந்த் வழங்கினார். புதிய வீட்டின் பால் காய்ச்சும் விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், புதிய வீட்டில் குத்துவிளக்கேற்றி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது