செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 14 அக்டோபர் 2020 (10:06 IST)

என்னது மண்டபத்துக்கு சொத்து வரியா – நீதிமன்றத்துக்கு சென்ற ரஜினி!

கொரோனா காரணமாக மண்டபம் மூடப்பட்டுள்ள நிலையில் அதற்கு சொத்து வரிக் கட்ட முடியாது என ரஜினிகாந்த் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ரஜினிக்கு சொந்தமான திருமண  மண்டபம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ளது. அதை அவ்வப்போது ரஜினி தனது ரசிகர்களை சந்திக்கவும் பயன்படுத்திக் கொள்வார். இந்நிலையில் இப்போது அந்த மண்டபத்துக்கான கடந்த 6 மாதத்துக்கான சொத்து வரியைக் கட்ட சொல்லி மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆனால் கடந்த 6 மாதமாக மண்டபம் திறக்கப்படவே இல்லை என்பதால் சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என ரஜினியின் சட்ட ஆலோசகர் விஜயன் சுப்ரமணியன் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில் ‘ரஜினிகாந்த் தனது திருமணம் மண்டபத்துக்கு முறையாக சொத்து வரி செலுத்தி வருகிறார். கடைசியாக கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி சொத்து வரி கட்டியுள்ளார்.

பின்னர், தொற்று நோய் காரணமாக மத்திய மாநில அரசுகள் பொதுமுடக்கத்தை கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் அமல்படுத்தியது. இதைத்தொடந்து திருமண மண்டபம் காலியாக இருந்தது. மார்ச் 24 முதல் யாருக்கும் வாடகைக்கு விடவில்லை. அனைத்து முன்பதிவுகளையும் ரத்து செய்து பணம் திருப்பி கொடுக்கப்பட்டுவிட்டது. இந்த சூழ்நிலையில் சென்னை மாநகராட்சி, ரஜினிகாந்தின் திருமண மண்டபத்திற்கு ஏப்ரல் - செப்டம்பர் மாதத்திற்கான சொத்து வரியாக 6.50 லட்சத்தை கட்ட வேண்டும் என கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி இன்வாய்ஸ் அனுப்பியுள்ளது.

எனவே பொதுமுடக்க காலத்தில் காலியாக இருந்த திருமண மண்டபத்திற்கு விதித்த சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என எனது மனுதாரர் கோரியுள்ளார். மேலும் இதுகுறித்து சென்னை மாநகராட்சிக்கு கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதியே மனுதாரர் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் இதுவரை அதுகுறித்து பதில் வரவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.