1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 22 பிப்ரவரி 2025 (09:17 IST)

பாலச்சந்தர் பட டிரைலரை இப்போது வெளியிட்டால் ‘பேட் கேர்ள்’ டிரைலரை விட எதிர்ப்பு அதிகமாகும்- ஆர் கே செல்வமணி!

இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் வர்ஷா இயக்கத்தில் உருவான ‘பேட் கேர்ள்’ திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்த டீசரில் ஒரு பதின் பருவ பெண்ணின் விருப்பங்கள் மற்றும் ஆசைகள் சார்ந்த காட்சிகள் பலவற்றைக் காட்டியிருந்தனர். அதில் அந்த பெண் புகைப்பிடிப்பது, குடிப்பது  போன்ற காட்சிகள் இருந்ததால் கண்டனங்கள் எழுந்தன.

இந்த டீசரைப் பாராட்டிய விஜய் சேதுபதி, பா ரஞ்சித் ஆகியோருக்கு எதிராகவும் சமூகவலைதளங்களில் கண்டனப் பதிவுகள் வெளியாகின. இதையடுத்து இந்த படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என்றும் தற்போது கருத்துகள் எழுந்தன. இதையடுத்து அந்த படத்துக்கு மிஷ்கின் உள்ளிட்ட இயக்குனர்கள் ஆதரவாகப் பேசினர்.

இந்நிலையில் இப்போது fefsi கூட்டமைப்பின் தலைவர் ஆர் கே செல்வமணி ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது “சோறு கொதிக்கும் போது சில அரிசிகள் வெளியில் வந்துவிடும். அதை தொட்டுப் பார்த்துவிட்டு சோறு வேகவில்லை என்று சொல்லக் கூடாது. அதனால் டீசரில் வந்த காட்சிகள் சரியா, தவறா என்பதை படம் பார்த்தவுடன்தான் சொல்ல முடியும்.  படம் பார்க்காமல் கருத்து சொல்வதை அரைவேக்காட்டுத் தனமாகதான் பார்க்கிறேன். பாலச்சந்தரின் ‘அரங்கேற்றம்’ படத்தின் டிரைலரை இப்போது வெளியிட்டால் இதை விட 100 மடங்கு எதிர்ப்பு வரும்” எனக் கூறியுள்ளார்.