கௌதம் மேனன் சொன்னது தவறு… அவருக்கு சரியான புரிதல் இல்லை –சமுத்திரக்கனி பதில்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன். அவர் இயக்கிய மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன. ஆனால் அதன் பின்னர் அவர் தயாரிப்புப் பணிகளில் கால்பதித்ததால் இயக்குனராக பின்னடைவை சந்தித்தார். அவர் இயக்கி தயாரித்த துருவ நட்சத்திரம் திரைப்படம் 7 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. தற்போதைக்கு இயக்குனராக தமிழ் சினிமாவில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை.
அதையடுத்து அவர் மலையாளத்தில் மம்மூட்டியை வைத்து டாம்னிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் என்றொரு படத்தை இயக்கினார். அந்த படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. இதையடுத்து அவர் தமிழில் மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளார். சமீபத்தில் அவர் கலந்துகொண்ட ஒரு நேர்காணலில் “இப்போது இல்லாத சாதியை 80 கள் 90கள் என காலத்தை பின்நோக்கி தள்ளி அதைப் பற்றி படம் எடுப்பது எனக்குப் பிடிக்கவில்லை” எனக் கூறியிருந்தார்.
இது அப்போதே விமர்சனங்களைப் பெற்ற நிலையில் தற்போது சமுத்திரக்கனி அதற்கு பதிலளித்துள்ளார். அதில் “கௌதம் மேனன் சொன்னதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அவருக்கு அதில் சரியான புரிதல் இல்லை என்று நினைக்கிறேன். ஒருவேளை அவர் பார்க்கும் நகர்ப்புற வாழ்க்கையை வைத்து அதை அவர் சொல்லி இருக்கலாம். இன்னும் கிராமத்தில் தெருவில் கூட சாதி இருக்கிறது. இந்த தெருக்காரன் அந்த தெருவுக்குள் போக முடியாது. அந்த தெருக்காரன், இந்த தெருவுக்குள் நுழைய முடியாது” எனக் கூறியுள்ளார்.