திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 1 மார்ச் 2023 (08:41 IST)

விஷ்ணுவின் நவீன அவதாரக் கதையாக உருவாகி வருகிறது- பிரபாஸின் ப்ராஜக்ட் கே குறித்து தயாரிப்பாளர்!

பாகுபலி புகழ் பிரபாஸ் நடித்துவரும் 21 வது படம் குறித்த அதிரடி அறிவிப்புகள் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகின. கீர்த்தி சுரேஷ் நடித்த ’நடிகையர் திலகம்’ என்ற ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கும் இந்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நாயகியாக நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது நடந்து வரும் நிலையில் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அடுத்த ஆண்டு சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படம் ஜூலை மாதத்தில் ரிலீஸ் ஆகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் பற்றி அதன் தயாரிப்பாளர் அஸ்வினி தத் ”கற்பனை மற்றும் பேண்டசிக்கு முன்னுரிமை கொடுத்து இந்த படம் உருவாகி வருகிறது. கிராபிக்ஸ் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். அந்த பணிகளை 6 மாதங்களாக செய்து வருகிறோம். விஷ்ணுவின் நவீன அவதாரத்தைப் பற்றியதாக படம் இருக்கும். இதுவரை சுமார் 70 சதவீதக் காட்சிகள் படமாக்கப் பட்டுவிட்டன” எனக் கூறியுள்ளார். இந்த படத்துக்கு நம்மூர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.