தங்கமீன்கள் பேபி சாதனாவுக்கு இளவரசி விருது...
ராம் இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளிவந்த ‘தங்கமீன்கள்’ திரைப்படத்தில் நடித்து, சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றவர் பேபி சாதனா.
அப்படத்தில் இவர் ஏற்று நடித்த "செல்லம்மா" என்ற கதாபாத்திரம் பலராலும் வெகுவாக பாராட்டப்பட்டது. இபோது மீண்டும் ராம் இயக்கத்தில் அவர் நடித்துள்ள பேரன்பு திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் பேபி சாதனா துபாயில் இளவரசி டயானா விருது வாங்கியுள்ளார்.
பிரிட்டிஷ் இளவரசி டயானாவின் நினைவாக 1999 ஆம் ஆண்டிலிருந்து இளவரசி டயானா விருது வழங்கப்படுகிறது. சமூக மேம்பாட்டிற்காக முயற்சி எடுக்கும் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது. ஒன்பது வயதில் இருந்து 25 வயதிற்குட்பட்டவர்கள் குறைந்தபட்சம் ஒரு வருடம் சமூக மேம்பாட்டிற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தால் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்படலாம்.
இந்நிலையில் இப்போ து துபாயில் வசித்து வரும் சாதனா, அவருடைய பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலோடு பல சமூக சேவைகளிலும், சமூக மேம்பாட்டிற்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த விருதுகுறித்து பேசிய சாதனா, சிறுவயதிலேயே உலக அளவில் ஒரு விருது கிடைத்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ராம் அங்கிள் தான் என்றார் சாதனா.
பேபி சாதனா துபாயில் உள்ள குறைபாடுடைய குழந்தைகள் மற்ற குழந்தைகளைப் போல இயல்பு வாழ்க்கை வாழ உதவும் வகையில் அவர்களுக்கு ஸ்பீச் தெரப்பி, நடனம் போன்ற கலைகளை கற்று கொடுத்து குறைகளை மறந்து நிறைகளைக் கொண்டாடும் மனப்பக்குவம் போன்ற பல விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளார்.
இவரின் சமூக அக்கறையைக் கவனித்த பள்ளி நிர்வாகத்தினர், சாதனாவை ஊக்குவிக்கும் விதமாக இங்கிலாந்தில் ஆண்டுதோறும் துபாயில் நடைபெறும் "இளவரசி டயானா" விருதுக்கு பரிந்துரைத்துள்ளனர்.
இந்த இளவரசி டயானா விருது என்பது ஒருவர் எத்தனை மாதங்கள் தொடர்ச்சியாக இதுபோல் பயிற்சியளிக்கிறார் என்பதைக் கண்காணித்து, பயிற்சி பெற்ற குழந்தைகளிடன் நேர்க்காணல் செய்து அவர்களின் திறன் மேம்பாட்டை பரிசோதித்த பிறகே இந்த விருது வழங்கப்படுகிறது. இந்தியாவிலிருந்து விருதுபெறும் சிலரில் தமிழகத்தைச் சேர்ந்த சாதனாவும் இந்த விருதை தட்டி சென்றுள்ளார்.