செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Arun Prasath
Last Updated : சனி, 5 அக்டோபர் 2019 (14:17 IST)

”அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்”.. பாஜகவின் மீது வலுக்கும் கண்டனங்கள்

சிறுபான்மையினர் மற்றும் பட்டியலினத்தவர்கள் மீதான தாக்குதல் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு மோடிக்கு கடிதம் எழுதிய மணி ரத்னம் உள்ளிட 49 பேர் மீது தேச துரோக வழக்கு பாய்ந்த நிலையில், இதற்கு திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஆங்காங்கே மதத்தின் பெயரால், சிறுபான்மையினர் மற்றும் பட்டியலினத்தவர்கள் மீதும் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவம் நடந்துவருகிறது. குறிப்பாக இஸ்லாமியர்கள் மதத்தின் பெயரால் கொல்லப்படும் கொடூரமும் நடந்துவருகிறது. இதனிடையே இது போன்ற தாக்குதல்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், இதனை உடனே தடுக்கவேண்டும் எனவும் இயக்குனர் மணிரத்னம், அனுராக் காஷ்யப், அடூர் கோபாலகிருஷ்ணன், வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா உள்ளிட்ட 49 பேர் கடந்த ஆகஸ்து மாதம் மோடிக்கு தனது கையொப்பங்களை இட்டு கடிதம் எழுதினர்.

இதனையடுத்து மோடிக்கு கடிதம் எழுதிய அந்த 49 பிரபலங்கள் மீதும், நாட்டின் நற்பெயரை கெடுத்தல் மற்றும் பிரிவினைவாத போக்குகளை ஆதரவளித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தேச துரோகம், மற்றும் உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இதனை தொடர்ந்து திரையுலக பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இது குறித்து ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது டிவிட்டர் பக்கத்தில் ”நம்முடைய கருத்தை கூறுவது தேசத் துரோகம் என்றால், நாம் அமைதியாகத்தான் இருக்கவேண்டும், அதிகாரம் அவர்கள் கையில் இருக்கிறது. அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள்” என கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர்,” ஒவ்வொறு மனிதனுக்கும் கருத்துக்கள் உண்டு, தங்கள் கருத்துகளை கூறுவதால் தேச துரோக வழக்கு பாயும் என்றால், அதை நாம் எதிர்கொள்வோம். விழித்துக்கொள்வோம், அமைதியாக இருக்க முயற்சிப்பது ஆபத்தில் முடியும்” என கூறியுள்ளார்.

49 பிரபலங்கள் மீது தேச துரோக வழக்கு பாய்ந்ததை குறித்து அரசியல் தலைவர்களான ஸ்டாலின், வைகோ, முத்தரசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.