பிரதமருக்கு கடிதம் எழுதினால் தேச துரோகியா?? கொந்தளிக்கும் பிரபலங்கள்

Arun Prasath| Last Modified சனி, 5 அக்டோபர் 2019 (10:26 IST)
இந்தியாவில் சிறுபான்மையினர் மற்றும் பட்டியலினத்தவர் மீதான தாக்குதல் குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என கடிதம் எழுதிய மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது, தேச துரோக வழக்கு பாய்ந்த நிலையில், இதனை பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் கண்டித்துள்ளனர்.

இந்தியாவில் ஆங்காங்கே மதத்தின் பெயரால், சிறுபான்மையினர் மற்றும் பட்டியலினத்தவர்கள் மீதும் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவம் நடந்துவருகிறது. குறிப்பாக இஸ்லாமியர்கள் மதத்தின் பெயரால் கொல்லப்படும் கொடூரமும் நடந்துவருகிறது. இதனிடையே இது போன்ற தாக்குதல்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், இதனை உடனே தடுக்கவேண்டும் எனவும் இயக்குனர் மணிரத்னம், அனுராக் காஷ்யப், அடூர் கோபாலகிருஷ்ணன், வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா உள்ளிட்ட 49 பேர் கடந்த ஆகஸ்து மாதம் மோடிக்கு தனது கையொப்பங்களை இட்டு கடிதம் எழுதினர்.

இதனையடுத்து மோடிக்கு கடிதம் எழுதிய அந்த 49 பிரபலங்கள் மீதும், நாட்டின் நற்பெயரை கெடுத்தல் மற்றும் பிரிவினைவாத போக்குகளை ஆதரவளித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தேச துரோகம், மற்றும் உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் “பிரதமருக்கு கடிதம் எழுதினால் தேச துரோக வழக்கா?” என பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பிரபாலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


இது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ், “கடிதம் எழுதிய பிரபலங்கள் மீது வாக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது திகைப்பை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார். மேலும் சமூகத்தில் அந்தஸ்தில் இருப்பவர்களுக்கே இந்த நிலைமை என்றால், அடிதட்டு மக்களின் என்னவாக இருக்கும் எனவும், மோடி நாட்டின் தலைவர் என்றால், ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருப்பதை நிறுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து திரைப்பட ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ராஜீவ் மேனன், ”பிரதமருக்கு கருத்து தெரிவிப்பது கூட நீதிமன்றத்தால் தேச துரோக செயலாக கருதப்படுவது வருத்தமளிக்கிறது என கூறியுள்ளார். இது குறித்து இயக்குனர் வெற்றி மாறன், பிரதமருக்கு கடிதம் எழுதுவது, நாட்டில் சிறுது காலமாக நிலவி வரும், கொலைகள் போன்ற பயங்கரமான செயலுக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கான நாகரீகமான மற்றும் முறையிலான வழி ஆகும் என தெரிவித்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு மோடி பதவி ஏற்றதிலிருந்து, சிறும்பான்மையினர் மற்றும் பட்டியலினத்தவர்கள் மீதான தாக்குதல், அதிகமாகிக் கொண்டிருக்கிறது என இடது சாரி அமைப்புகள் குற்றம்சாட்டிவருவது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :