கேட்ட நொடி முதல் கிறங்கிக் கிடக்கிறேன்… இரவின் நிழல் குறித்து பார்த்திபன் உருக்கம்!
வித்யாசமான கதைக் களன்களோடு திரைப்படம் எடுப்பதில் இயக்குனர், நடிகர் பார்த்திபன் எப்போதுமே தனித்துவமானவர். சமீபத்தில் அவர் உருவாக்கிய ஒத்த செருப்பு ஒரே ஒரு நடிகரை வைத்து மட்டுமே எடுக்கப்பட்ட வித்தியாசமான முயற்சியாக அமைந்தது. இதையடுத்து அவர் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுக்க இருக்கிறார். இதில் வித்தியாசமான முயற்சியாக முழுப்படத்தையும் ஒரே ஷாட்டாக எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார். உலகளவில் இதுபோல சில படங்கள் முயற்சி செய்யப்பட்டிருந்தாலும் தமிழில் இதுவே முதல்முறை. பார்த்திபனின் இந்த அறிவிப்பால் தமிழ் சினிமா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்நிலையில் ரஹ்மான் இசையைப் பற்றி பார்த்திபன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் 'இரவின் நிழல்-ஏ ஆர் ரஹ்மான் இசை ம்யூரல்! பின்னணி இசைக்காக அவர் குரலில் ஒரு ட்யூனை அனுப்பி என்னை எழுதச் சொன்னார். கேட்ட நொடி முதல் கிறங்கிக் கிடக்கிறேன் high-யில். இறங்கி வந்து அந்த abstract tune-க்கு வரி வடிவம் கொடுக்கும் முயற்சியில் ஒரு வாரம் மூழ்க, பதிவும் செய்யப்பட்டது. சங்குக்குள் அடக்கப்பட்ட கங்கை போல், முழு படத்தின் வீரியத்தையும் ஒரு பாடலில். சிலிர்த்து சிறகடித்து பறக்கிறேன் பரவசத்தில். ரசித்து சமைத்தால் தானே இலைக்கு (திரைக்கு) வரும்போது ருசிக்கும்." என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.