துக்ளக் தர்பார் படத்தை எதிர்க்கும் நாம் தமிழர் கட்சியினர் – ஓ இதுதான் காரணமா?
விஜய் சேதுபதி மற்றும் பார்த்திபன் நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார் படத்தின் டீசரில் சீமானை இழிவு செய்வதாக அந்த கட்சியை சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மற்றும் பார்த்திபன் இருவரும் 'துக்ளக் தர்பார்' என்ற படத்தில் நடித்து வருகின்றனர் . இந்தப்படத்தை டெல்லி பிரசாத் தீனதயாள் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அதிதிராவ் ஹைத்ரி ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வந்தார். ஆனால், கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் நடிகை அதிதிராவ்விற்கு கால்ஷீட் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த கதாபாத்திரத்தில் மஞ்சிமா மோகன் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் டீசர் நேற்று இணையத்தில் வெளியானது. இதைப் பார்த்த நாம் தமிழர் கட்சியினர் கோபத்தில் பொங்கி வருகின்றனர். அதற்குக் காரணம் படத்தில் பார்த்திபனின் கதாபாத்திரம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை இழிவுப்படுத்தும் விதமாகவும் கேலி செய்யும் விதமாகவும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கருதுகின்றனர்.
அதனால் அந்த படத்தின் இயக்குனர் குறித்தும் விஜய் சேதுபதி குறித்தும் சமூகவலைதளங்களில் கோபமான பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இன்னும் ஒரு சிலரோ 800 திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தியதால் அவர்களை பழிவாங்கும் விதமாகவே விஜய் சேதுபதி இவ்வாறு செயல்படுவதாக கூறிவருகின்றனர்.