மோகன்லால் & லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் ‘மலைக்கோட்டை வாலிபன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
மலையாள சினிமாவில் தற்போது இருக்கும் முக்கியமான இயக்குனர்களில் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரியும் ஒருவர். அவர் இயக்கிய அங்கமாலி டைரிஸ், ஈ மா வு மற்றும் ஜல்லிக்கட்டு ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றவை. ஜல்லிக்கட்டு இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில் நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படத்துக்குப் பிறகு இப்போது மோகன்லால் நடிப்பில் மலைக்கோட்டை வாலிபன் என்ற பேன் இந்தியா படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் சுதந்திரத்துக்கு முன்பு இந்தியாவில் பிரபலமாக இருந்த மல்யுத்த வீரரான காமா என்கிற குலாம் முகமது பக்ஷ் என்பவரின் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை படத்தின் தயாரிப்பு தரப்பு மறுத்துள்ளது.
சமீபத்தில் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் இப்போது புதிய போஸ்டரோடு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு தமிழ்நாட்டிலும் பெரியளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.