‘மெர்சல்’ படத்துக்கு இன்னும் சென்சார் சர்ட்டிஃபிகேட்டே கிடைக்கலையாம்…
‘மெர்சல்’ படத்துக்கு இன்னும் சென்சார் சர்ட்டிஃபிகேட் கிடைக்காத தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அட்லீ இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மெர்சல்’. இந்தப் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துவிட்டதாக சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார் அட்லீ. ‘வேட்டைக்காரன்’ படத்துக்குப் பிறகு யு/ஏ சான்றிதழ் பெறும் விஜய் படம் இது.
இந்நிலையில், விலங்குகள் நல வாரியத்திடம் இருந்து அனுமதிக் கடிதம் பெறுவதில் ‘மெர்சல்’ படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சரியான ஆவணங்களை சமர்ப்பிக்காததால், இன்னும் விலங்குகள் நல வாரியம் அனுமதி சான்றிதழ் அளிக்கவில்லை.
மேலும், நாங்கள் அனுமதிக்காமல் நீங்கள் எப்படி யு/ஏ சான்றிதழ் கொடுக்கலாம் என சென்சார் போர்டு அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளது விலங்குகள் நல வாரியம். அதற்குப் பதிலளித்துள்ள சென்சார் போர்டு, ‘நாங்கள் வாய்மொழியாகத்தான் யு/ஏ என்று அறிவித்துள்ளோம். இன்னும் சான்றிதழ் வழங்கவில்லை’ என்று தெரிவித்துள்ளது.
எனவே, விலங்குகள் நல வாரியம் அனுமதி சான்றிதழ் வழங்கினால் மட்டுமே, சென்சார் சான்றிதழையும் பெற முடியும். இவை இரண்டையும் பெற்றால் மட்டுமே படத்தை ரிலீஸ் செய்ய முடியும். தீபாவளிக்குள் இந்த பிரச்னை தீர்ந்துவிடுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.