வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 30 நவம்பர் 2024 (08:25 IST)

ஐயாம் சாரி ஐய்யப்பா… அறிவு புகட்டி அனுப்பப்பா… இசைவாணி பாடலை விமர்சித்த எம் எஸ் பாஸ்கர்!

ஐயப்பன் குறித்து சர்ச்சைக்குரிய பாடலை பாடியதாக இசைவாணி மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இது குறித்து பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகரான எம் எஸ் பாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கைக் கவனம் பெற்றுள்ளது.

அவரது பதிவில் ”இசைவாணி பாடியிருந்த 'ஐயம் ஸாரி ஐயப்பா' பாடலை சமீபத்தில் கேட்டேன். சுவாமி ஐயப்பனிடம் மன்னிப்புக் கேட்டு பாடத் தொடங்கிய விதம் அருமை, நல்ல குரல் வளம். ஆடிக்கொண்டே பாடிய ஸ்டைல் அற்புதம். ஒரே ஒரு குறை, பாடல் தெளிவாகக் கேட்காத அளவுக்கு வாத்தியங்களின் ஓசை அதிகம். இது போன்ற கருத்தாழமுள்ள பாடல்களை சபரிமலை அருகிலேயே மேடையிட்டு, விஷு, மகரஜோதி போன்ற விசேஷ நேரங்களில் பாடுவது இன்னும் சிறப்பாக இருக்கும். இவர்களுக்கும் 'பூசை' சிறப்பாக நடக்கும்.

நான் சிறுவனாக இருந்த போது எனது மூத்த சகோதரர் சபரிமலைக்கு இருமுடி கட்டி, வாய்க்கரிசி வாங்கிச் செல்வதை கண்டிருக்கிறேன். அதே போல் இவர்களும் உறவினர்கள் நண்பர்களிடம் வாய்க்கரிசி வாங்கிக் கொண்டு சென்று இசை நிகழ்ச்சி நடத்தலாம். பாடல் எழுதியவரையும் அறிமுகப்படுத்தலாம். இப்படிப்பட்ட அருமையான பாடலை, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என எல்லா மொழிகளிலும் பாடலாம். எல்லா மொழி பக்தர்களும் கேட்டு 'பரிசளிப்பார்கள்' அல்லவா? யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பாடலாம். என்ன ஒன்று. ஐயன் ஐயப்பன் இதை 'நிந்தா ஸ்துதி'யாக ஏற்றுக்கொள்வார். அவர் வாகனமாகிய புலி ஏற்றுக் கொள்ளுமா என்று தெரியவில்லை! 'ஐயாம் ஸாரி ஐயப்பா. அறிவு புகட்டி அனுப்பப்பா.

எந்த இறைவனை தொழுதாலும் மற்றவர்கள் மனதை புண்படுத்தாமல் இருப்பதே உண்மையான ஆன்மிகம், பக்தி. தனக்கு தீங்கு செய்தவரை அந்த விநாடியே மன்னித்தவர் நபிகள் நாயகம். சிலுவையில் அறைந்து விலாவில் ஈட்டியால் குத்திய போதும் 'பிதாவே... இவர்கள் அறியாமல் செய்யும் பிழையை மன்னிப்பீராக' என்று வேண்டியவர் இயேசு பிரான். மற்ற கடவுளர்களை வசை பாடும்படியோ, மற்ற மதத்தினர் மனதை புண்படுத்துமாறோ எந்த மஹான்களும் சொல்லவில்லை. இறைவா... ’இவர்கள்' அறியாமல் செய்யும் பிழைகளைக் கருணை கூர்ந்து மன்னித்து அமைதியும், சமாதானமும் நிலவச்செய்வீராக.” எனக் கூறியுள்ளார்.