இசைவாணி மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு..!
ஐயப்பன் குறித்து சர்ச்சைக்குரிய பாடலை பாடியதாக இசைவாணி மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அவர் மீது தவறு இருந்தால் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
கோடிக்கணக்கான மக்கள் சபரிமலை ஐயப்பனை வழிபட்டு வரும் நிலையில், அவரை இழிவுபடுத்தும் வகையில் பாடகி இசைவாணி கானா பாடல் பாடியதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார் .
"எல்லாருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி நடந்து வருகிறது. எந்த மதத்தினரும் பிற மதத்தினரை இழிவுபடுத்துவதை அனுமதிக்க முடியாது. இசைவாணி மீது புகார் கொடுக்கப்பட்டதை அறிந்தேன். இதுகுறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்து, அவர் மீது தவறு இருந்தால் உறுதியாக இந்த அரசு நடவடிக்கை எடுக்கும்," என்று அவர் கூறினார்.
மேலும், மதத்தால் அல்லது இனத்தால் மக்களை பிளவுபடுத்தும் சக்திகள் இந்த ஆட்சியில் தலைதூக்க முடியாது," என்றும் உறுதியாக தெரிவித்தார்.
இதேபோல, "இர்பான்" குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறிய நிலையில், அதுவே இன்னும் நடைபெறாததை பற்றிய விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனை ஒப்பிட்டு, இசைவாணி விவகாரத்திலும் அதே தான் நடக்கும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் தெலுங்கு பேசும் மக்களை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக கஸ்தூரியை தனிப்படைகள் அமைத்து கைது செய்த சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran