திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 16 அக்டோபர் 2022 (16:09 IST)

“தோல்விக்காக என்னால் அழுது கொண்டு இருக்க முடியாது…” லைகர் இயக்குனர் மனம் திறப்பு

லைகர் படத்தின் படுதோல்வியால் பூரி ஜெகன்னாத் அடுத்து இயக்க இருந்த படம் நிறுத்தப்பட்டுள்ளது.

விஜய் தேவரகொண்டா- இயக்குனர் பூரி ஜெகன்னாத் – தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள லைகர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியானது. இந்த படத்தில் அமெரிக்க குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது இந்த படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ஆனால் ரிலீஸூக்கு பின்னர் மிக மோசமான விமர்சனங்களைப் பெற்றது. இதனால் படத்தின் வசூல் பெரியளவில் பாதிக்கப்பட்டு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. லைகர் தோல்வியால் விஜய் தேவரகொண்டா- பூரி ஜெகன்னாத் கூட்டணியில் உருவாக இருந்த JGM என்ற படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தியாக அமைந்துள்ளது.

இந்நிலையில் பூரி ஜெகன்னாத் லைகர் தோல்வி பற்றி முதல் முறையாக மனம் திறந்துள்ளார். அதில் “என்னால் லைகர் தோல்வியை நினைத்துக் கொண்டு அழுதுகொண்டே இருக்க முடியாது. நான் மூன்று வருடங்கள் அந்த படத்தில் வேலை பார்த்தேன். இப்போது நினைத்துப் பார்க்கும் போது அதிக நாட்கள் மகிழ்ச்சியாகதான் இருந்தேன். அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துவிட்டேன். என்னிடம் இருந்து ரசிகர்களை மகிழ்விக்கும் படம் வரும் என்று உங்களிடம் கூறிக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.