வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 11 நவம்பர் 2024 (12:36 IST)

என்னை ராசியில்லாத நடிகை என முத்திரைக் குத்தினார்கள்… கீர்த்தி சுரேஷ் வேதனை!

கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கதாநாயகியாகவும் நடிக்கத் தொடங்கினார். தமிழில் அவரின் முதல் படம் ஏ எல் விஜய் இயக்கிய ‘இது என்ன மாயம்’ திரைப்படம்தான். அதன் பின்னர் வெளியான ரஜினி முருகன் படம் அவரை முன்னணி நடிகையாக்கியது.

இப்போது தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு நிலையான மார்க்கெட் வைத்திருக்கும் நடிகைகளில் கீர்த்தி சுரேஷும் ஒருவர். ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ள அவர் இடையில் நடிகையர் திலகம் திரைப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார். அதன் பின்னர்  பெண்குயின், சாணிக் காயிதம் மற்றும் ரகு தாத்தா போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் கதைகளிலும் நடித்து வருகிறார். 

இந்நிலையில் சினிமாவில் தன்னுடைய ஆரம்பகாலம் குறித்து பேசியுள்ள அவர் “நான் முதலில் ஒரு மலையாள படத்தில் நடிக்கதான் ஒப்பந்தம் ஆனேன். என் அம்மா போல நடிகை ஆகப் போவதை எண்ணி மகிழ்ச்சியில் இருந்தேன். ஆனால் அந்த படம் கைவிடப்பட்டது. அதன் பின்னர் நான் ஒப்பந்தம் ஆன வேறு இரண்டு படங்களும் பாதியிலேயே கைவிடப்பட்டன. இதனால் என்னை ராசியில்லாத நடிகை என்று முத்திரைக் குத்தினார்கள். அதை நினைத்தால் எனக்கு வேதனையாக இருக்கும். அது குறித்து பிரச்சாரமும் செய்தனர்.ஆனால் நான் முயற்சியைக் கைவிடவில்லை. தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து தேசிய விருது பெற்ற நடிகையாக உயர்ந்தேன்” எனக் கூறியுள்ளார்.