காந்தாரா சர்ச்சைக்குரிய பாடலை நீக்கிய ப்ரைம் வீடியோ… ரசிகர்கள் ஏமாற்றம்!
கேஜிஎஃப் திரைப்படத்தின் மூலம் பிரபலமான தயாரிப்பு நிறுவனமானது ஹோம்பலே பிலிம்ஸ். அடுத்து வரிசையாக பல திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் அவர்களின் அடுத்த வெளியீடாக ரிலீஸ் ஆன காந்தாரா திரைப்படம் பாராட்டுகளைப் பெற்று இந்தியா முழுவதும் வசூலில் கலக்கியது. ஆனால் இந்த திரைப்படத்தில் காடுகளில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு எதிரான கருத்துகள் உள்ளதாக இடதுசாரியினர் கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.
இந்நிலையில் உலகம் முழுவதும் இந்த திரைப்படம் சுமார் 400 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட காந்தாரா திரைப்படம் பட்ஜெட்டை விட 20 மடங்கு அதிக வசூலை திரையரங்குகள் மூலமாக மட்டுமே வசூலித்துள்ளது.
இந்த படத்தில் வராஹ ரூபம் என்ற பாடல் தங்களின் பாடலை காப்பியடித்து உருவாக்கப் பட்டதாக, தாய்க்குடம் பிரிட்ஜ் என்ற குழுவினர் புகாரளிக்க, அது சர்ச்சையானது. இந்நிலையில் இப்போது ஓடிடியில் காந்தாரா திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், வராஹ ரூபம் பாடல் நீக்கப்பட்டு, அதற்குப் பிறகு வேறு காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் ஓடிடியில் படம் பார்த்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.