பாடப் புத்தகத்தில் விஜயகாந்த் குறித்து இடம்பெற வேண்டும்… ஜெயம் ரவி ஆசை!
தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி காலமானார். அதையடுத்து அவருக்கு பெருவாரியான ரசிகர்கள் ஒன்றாக திரண்டு அஞ்சலி செலுத்தினர். அவரின் உடலில் கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
அதையடுத்து இப்போது வரை ரசிகர்களும் தொண்டர்களும் விஜயகாந்த் நினைவிடத்தில் தினமும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று விஜயகாந்துக்காக தென்னிந்திய நடிகர் சங்கம் அஞ்சலி கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தது. அதில் கலந்து கொண்ட நடிகர்கள் பலர் விஜயகாந்துடனான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
அப்போது பேசிய நடிகர் ஜெயம் ரவி “விஜயகாந்த் குறித்த பாடம் பள்ளி பாடப் புத்தகத்தில் இடம்பெற வேண்டும். நடிகர், அரசியல் வாதி என்பதை எல்லாம் தாண்டி ஒரு நல்ல மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்ற தலைப்பில் அவர் குறித்த பாடம் இடம்பெற வேண்டும்” என பேசியுள்ளார்.