1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (10:05 IST)

இந்த மாதிரி படங்கள் ஏன் வருவதில்லை… இளையராஜாவைக் கவர்ந்த கிளாசிக் உலக சினிமா!

இசையமைப்பாளர் இசையில் சில்ட்ரன் அஃப் ஹெவன் திரைப்படம் தமிழில் அக்கா குருவி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

உலக சினிமா ரசிகர்கள் யாரிடம் கேட்டாலும் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களில் ஒன்றாக சில்ரன் ஆஃப் ஹெவன் படத்தை சொல்லுவார்கள். அந்த அளவுக்கு உலக அளவில் ரசிகர்களைப் பெற்ற இந்த படத்தை இயக்குனர் மஜித் மஜீது இயக்கியிருந்தார். ஒரே பள்ளியில் படிக்கும் அண்ணன் தங்கை இருவர். தங்கையின் ஷூவை அண்ணன் தொலைத்து விடுகிறான். அப்பாவுக்கோ புது ஷூ வாங்கும் அளவுக்கு வசதியில்லை. அதனால் அண்ணன் காலையிலும் தங்கை மதியமும் மாற்றி மாற்றி அண்ணனின் ஷூவைப் போட்டு செல்கின்றனர். அதனால் பல பிரச்சனைகள் உருவாகின்றன. இந்நிலையில் பள்ளியில் நடக்க இருக்கும் ஒரு போட்டியில் வெல்வோருக்கு ஷூ பரிசாக அளிக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது. ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்கிறான் அண்ணன்.. வென்றானா? ஷூ கிடைத்ததா ?

இந்த சின்ன கதையை வைத்துக்கொண்டு ஈரானின் அரசியல் சூழ்நிலை, குடும்ப உறவுகள் ஆகியவற்றை மிக அற்புதமாக பதிவு செய்திருப்பார் இயக்குனர். வெளியாகி கிட்டதட்ட 20 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இந்தபடத்தை தமிழில் ரீமேக் செய்திருக்கின்றனர். உயிர், மிருகம் மற்றும் சிந்து சமவெளி ஆகியப்படங்களை இயக்கிய சாமி இந்த படத்தை இயக்கியுள்ளார். கொடைக்கானல் பகுதியில் இதன் படப்பிடிப்பு நடந்தது, சமீபத்தில் நடந்த சென்னை திரைப்பட சர்வதேச விழாவில் இந்த படம் திரையிடப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. அப்போது படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்டார். அவர் பேசிய போது “ சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படம் எனக்கு வியப்பைக் கொடுத்தது. படத்தைப் பார்த்த பின்னர் இதுபோன்ற படங்கள் ஏன் இங்கு வருவதில்லை என்ற எண்ணம் எழுந்தது. அந்த படத்தின் சாராம்சத்தை மாற்றாமல் நம் கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு இயக்குனர் ரீமேக் செய்துள்ளார்” எனவும் கூறியுள்ளார். இந்த படம் வரும் மே 6 ஆம் தேதி வெளியாக உள்ளது.