“ரஜினியின் திரைப்படம் பார்க்காவிட்டால் தமிழன் செத்துப்போக மாட்டான்” - இயக்குநர் காட்டம்
‘ரஜினியின் திரைப்படம் பார்க்காவிட்டால் தமிழன் செத்துப்போக மாட்டான்’ என இயக்குநர் செல்வம் சுப்பையா காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஜீவா, பாவனா நடித்த ‘ராமேஸ்வரம்’ படத்தை இயக்கியவர் செல்வம் சுப்பையா. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடுகளில் வாழும் ஈழத்து உறவுகளுக்கும், உலகத்தமிழ் உறவுகளுக்கும் ‘ராமேஸ்வரம்’ (யாழ்ப்பாணத்தில் இருந்து முப்பத்தாறு மைல்) திரைப்படத்தின் இயக்குநரான நான் உங்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். ஈழத்தில் நமது உரிமைக்காக நாம் யுத்தம் செய்தபோது, நமது யுத்தத்தை ஆதரித்தும்,
சிங்களர்களை எதிர்த்தும் தமிழகத்தில் பலர் தங்களின் உயிரை தாங்களே மாய்த்துக் கொண்டனர்.
இந்தியத் தமிழன், ஈழத்தமிழன் மற்றும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் பாகுபாடற்று ஒடுக்கப்படும் ஒரு சிக்கலான காலகட்டத்தில் தமிழர்களாகிய நாம் வாழ்கிறோம். நாம் தூக்கிப் பிடித்த, வார்த்தெடுத்த, கொடிகட்டி, போஸ்டர் ஒட்டி, பாலூற்றி வளர்த்த கன்னட கண்டக்டர் நமது சூப்பர் ஸ்டாரின் தூத்துக்குடி பேச்சைக் கேட்டிருப்பீர்கள். என்ன செய்வது... ஏற்றிவிட்டது நாம்தானே? தமிழன் வஞ்சிக்கப்படுவது வழக்கமானதாகிவிட்டது.
உறவுகளே... எதிர்ப்பைக் காட்டவும், வெறுப்பை உணர்த்தவும் நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். பிடிக்காதவர்களையும் பிடிக்காததையும் ஏற்றுக்கொள்ள இயலாததையும் உதாசீனப்படுத்துவதே உலகின் மிகப்பெரிய தற்காப்பு ஆயுதம். ரஜினியின் திரைப்படம் பார்க்காவிட்டால் தமிழன் செத்துப்போக மாட்டான். செத்தே போனாலும்கூட தவறில்லை. நானும், என் குடும்பமும் இனிமேல் ரஜினியின் திரைப்படங்களைப் பார்க்க மாட்டோம் என்று நான் உறுதியளிக்கிறேன். உறவுகளே... நீங்களும், உங்களைச் சார்ந்தவர்களும் இந்த உறுதியை ஏற்று, தமிழன் எதற்காகவும் மண்டியிட மாட்டான், தேவையெனில் மாண்டு போவான் என்பதை உலகிற்கும் துரோகிகளுக்கும் உணர்த்துங்கள்” என்று கூறியுள்ளார்.