“அ.தி.மு.க.வில் இணையப் போகிறேன்” - இயக்குநர் கே.பாக்யராஜ் அதிரடி
‘அ.தி.மு.க.வில் இணையப் போகிறேன்’ என இயக்குநர் கே.பாக்யராஜ் அதிரடியாக அறிவித்துள்ளார்.
ஜெயலலிதா இறந்தபிறகு தமிழக அரசியல் களம் பல அதிரடி மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. சசிகலா சிறைக்குச் சென்றுவிட, அவர் சார்பில் டிடிவி தினகரன் அ.தி.மு.க.வில் கோலோச்சி வருகிறார்.
ட்விட்டரில் கருத்துகளைக் கூறிவந்த கமல்ஹாசன், திடீரென அரசியலில் குதித்தார். பல வருடங்களாக அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட ரஜினியும் திடீரென அரசியலில் இறங்கியுள்ளார். விஷாலும் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்தார்.
இந்நிலையில், இயக்குநர் மற்றும் நடிகரான கே.பாக்யராஜும் அரசியலில் குதிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். தனியார் இணையதளம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள அவர், ‘அரசியலில் இறங்கினால் அ.தி.மு.க.வில் இணைவேன். எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி, இன்று சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது. அவரின் பக்தனாக கட்சியை வீழ்ச்சியடையாமல் என்னால் முடிந்த அளவுக்குப் பாடுபடுவேன்’ எனத் தெரிவித்துள்ளார்.