1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 26 ஜனவரி 2025 (09:40 IST)

ஸீரோ பேலன்ஸில் குடும்பம் நடத்துவது எப்படி? உண்மையை நகைச்சுவையாக சொன்ன ‘குடும்பஸ்தன்’! - திரை விமர்சனம்!

Kudumbasthan

நமது வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வேலையை நம்பி இருந்திருப்போம், சொந்தமாக தொழில் செய்து தோல்விகள் ஏற்பட்டிருக்கலாம். அப்படியான ஒரு உண்மை வாழ்க்கையை நகைச்சுவை பகடியுடன் கொண்டு வந்துள்ள படம்தான் குடும்பஸ்தன். ஒரு குடும்பஸ்தனாக நவீன் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், இந்த அமைப்பிற்கு (சிஸ்டம்) வளைந்து கொடுத்து போக வேண்டிய சூழல் போன்றவற்றை சிரிப்புடன் சிந்திக்கவும் வைக்கும்படி காட்சிப்படுத்தியுள்ளனர்.

 

Especially பிரசன்னா அண்ட் டீமின் காமெடி சம்பவம். ஒவ்வொரு காட்சிகளுக்கும் தியேட்டர்கள் சிரிப்பலையில் அதிர்கின்றன. படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் மணிகண்டனின் இயல்பான நடிப்பு, குரு சோமசுந்தரம் ஒருபக்கம் என்றால், பிரசன்னா, ஜென்சன் காமெடி மற்றொரு பக்கம். மிகைப்படுத்தப்பட்ட காமெடி வசனங்கள் ஏதுமில்லாமல் இயல்பான வசனங்கள், காட்சிகளிலேயே காமெடிகளை வொர்க் செய்திருந்தது சகஜ வாழ்க்கைக்கு நெருக்கமாக இருந்தது.
 

ஆனால் இதில் ஏற்றுக்கொள்ள முடியாதபடி இருந்தது நவீனின் அம்மா கேரக்டர்தான். மகன் பல லட்சம் கடனில் தவிக்கும்போது ஆன்மீக சுற்றுலாவுக்கு 50 ஆயிரம் கேட்டு நிற்பதும், நாள் முழுக்க போராடி சாப்பிட வந்து அமரும் நவீனிடம் இருந்து சாப்பாட்டு தட்டை பிடுங்கி செல்வதும், அவள் என்ன தாயாரா? மாமியாரா? என யோசிக்க வைத்தது. 
 

தற்போது பெரும்பாலான யூட்யூப் கிரியேட்டர்கள் திரைப்படம் நோக்கி நகர்ந்து வரும் நிலையில் யூட்யூப் வீடியோவுக்கும், திரைப்பட மீடியத்திற்குமான வேறுபாட்டை உணர்ந்து செயல்படாமல் சொதப்பி விடும் சம்பவங்களையும் காண முடிகிறது. ஆனால் அந்த பிரச்சினையை திறம்பட கையாண்டு ஒரு திரைப்படத்தை நக்கலைட்ஸ் படைத்துள்ளனர். சில இடங்களில், (கொஞ்சம் நேரம் எடுத்து சொல்லக்கூடிய சாத்தியமுள்ள) யூட்யூப் போல வேகமாக கட் செய்து சென்று விடுவது சுவாரஸ்யமாக தோன்றினாலும் படம் நீண்ட நேரம் ஓடும் ஒரு எண்ணத்தை உருவாக்குகிறது. மேலும் நவீன் ஏதாவது ஒரு இடத்தில் வெற்றிபெற மாட்டானா என்று பார்த்துக் கொண்டேயிருக்க தொடர்ந்து அவன் தோல்விகளாகவே சந்தித்து வருவது சற்று அயற்சி தருகிறது. சூரியவம்சம் சரத்குமார் போல 5 நிமிடத்தில் பணக்காரன் ஆகாவிட்டாலும், அவனுடைய நிலையிலிருந்து அட்லீஸ்ட் ஒரு படியாவது முன்னகர்ந்திருந்தால் மேலும் திருப்தியாக இருந்திருக்கும்.

 

Edit by Prasanth.K